புதுச்சேரியிலிருந்து வரும் 15-ல் தொடங்கவிருந்த சென்னை, சேலம் விமான சேவை திடீர் ஒத்திவைப்பு

0
0

 

புதுச்சேரியிலிருந்து சென்னை மற்றும் சேலத்துக்கு ஜூலை 15-ம் தேதி முதல் தொடங்கவிருந்த புதிய விமான சேவை திடீரென்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்திலிருந்து கடந்த 2013-ம் ஆண்டு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மற்றும் 2015 ஆம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனமும் புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு விமான சேவையைத் தொடங்கின. ஆனால் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் இச்சேவைகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

மத்திய அரசு நாட்டில் விமான சேவையை அதிகரிக்கும் நோக்கில் புதிய விமான கெள்கையை அறிவித்தது. அதன்படி உதான் திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களை வான் வழியாக இணைக்க விமான நிறுவனங்களுக்கு பாதி கட்டணத்தை, மத்திய அரசே ஏற்கும் எனவும் அறிவிப்பு வெளியிட்டது.

அத்திட்டத்தில் சேர்ந்து புதுச்சேரியில் இருந்து தடைப்பட்டிருந்த விமான சேவை மீண்டும் தொடங்க மாநில அரசு நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஐதராபாத்திற்கு விமான சேவையைத் தொடங்கியது. இதற்கு பயணிகளிடம் வரவேற்பு கிடைத்தைத் தொடர்ந்து, மீண்டும் பெங்களூருக்கு விமான சேவை தொடங்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி கடந்த பிப்ரவரி 15-ம் தேதி முதல் விமான சேவை தொடங்கியது.

இந்நிலையில் வருகின்ற ஜூலை மாதம் 15-ம் தேதி முதல் சென்னை மற்றும் சேலத்திற்கு புதிய விமான சேவையை தொடங்க உள்ளதாக ஏர் ஒடிஷா நிறுவனம் அறிவித்தது. பயணத்துக்கான முன்பதிவை www.airodisha.com என்ற தனது இணையதளத்தின் வாயிலாக தொடங்கியது.

வரும் 15-ல் விமான சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இச்சேவையை திடீரென்று இந்நிறுவனம் ஒத்திவைத்துள்ளது.

இதுதொடர்பாக இந்நிறுவன தரப்பில் கூறுகையில், “தவிர்க்க இயலாத காரணத்தால் இம்மாதம் திட்டமிட்டபடி விமான சேவை தொடங்கப்படவில்லை. மாற்றாக அடுத்த மாதம் புதுச்சேரியில் இருந்து சென்னை, சேலம் ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.