புதிய தலைமைச் செயலக கட்டிட விவகாரம்: நீதிபதி ரகுபதி ஆணையத்தின் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்- தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

0
0

புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்ததாகக் கூறி விசாரணை நடத்த அமைக்கப்பட்ட நீதிபதி ரகுபதி ஆணையத்தின் பணிகளை நிறுத்திவைக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்தக் கட்டிடம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விசாரிக்க கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி, மு.க.ஸ்டாலின், துரை முருகன் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ரத்து செய்யக் கோரியும் ஆணையத்தை எதிர்த்தும் கருணாநிதி உள்ளிட்டோர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு நீதிபதி ரகுபதி ஆணையத்துக்கு தடை விதித்தது.

இந்நிலையில், தடையை நீக்கக் கோரி ஆணையத்தின் சார்பில் தொடரப்பட்ட இடைக்கால மனு மீதான விசாரணை, உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நடந்து வந்தது. அப்போது நீதிபதி, ‘‘இந்த ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை அந்தத் தடையை நீக்கக்கோரி தமிழக அரசு ஏன் மனு தாக்கல் செய்யவில்லை. அல்லது ஆணையத்தை ஏன் இன்னும் கலைக்கவில்லை. இதுபோல எத்தனை ஆணையங்கள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன. அதற்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’’ என பல்வேறு கேள்விகளை எழுப்பினார். மேலும் இதுபோன்ற ஆணையங்கள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஏற்கெனவே ஆஜராகி, ‘இதுவரை ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் மொத்தம் 5 ஆணையங்கள் அமைக்கப்பட்டுள் ளன. அதில் நீதிபதி ரகுபதி ஆணை யத்துக்கு மட்டுமே தடையாணை உள்ளது. நீதிபதி ரகுபதி ஆணையத்துக்கு இதுவரை ரூ. 4.11 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 2015-ம் ஆண்டுக்குப் பிறகு அந்த ஆணையத்துக்கு ரூ. 2.23 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது’ என அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிபதி, ‘‘ செயல்படாத ரகுபதி ஆணையத்துக்கு ரூ. 2.23 கோடியை தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளாக வீணாக செலவழித்துள்ளது’ என வேதனை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரகுபதி ஆணையத் துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி தொடரப்பட்ட இடைக் கால மனு மீதான விசாரணை, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று மீண்டும் நடந்தது. அப்போது அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ரகுபதி ஆணையத்தின் தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் சி.மணிசங்கர், திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

அதையடுத்து இடையீட்டு மனு மீது நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் நேற்று மாலை தீர்ப்பளித்தார். தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது:

நீதிபதி ரகுபதி ஆணையத்தின் செயல்பாடுகளை நிறுத்திவைக்க தமிழக அரசு ஒரு வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அந்த ஆணையத்துக்கு வழங்கப்படும் நிதி மற்றும் இதர சலுகைகள் உள்ளிட்ட செலவினங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். நீதிபதி ரகுபதி ஆணையம் இதுவரை செய்த விசாரணை குறித்த அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் 2 வாரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும். அந்த ஆவணங்களின் மீது உரிய முகாந்திரம் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் விசாரணை நடத்த தகுந்த அமைப்புகளுக்கு உத்தரவிடலாம்.

ரகுபதி ஆணையத்துக்காக வழங்கப்பட்டுள்ள பங்களா, அலுவலகத்தை காலி செய்து தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இதுபோல மற்ற ஆணையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பங்களாக்களையும் தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும். இதுபோன்ற ஆணையங்களை அமைக்கும்போது தமிழக அரசு அதற்கான காலவரம்பையும் முன்கூட்டியே நிர்ணயிக்க வேண்டும். அந்த ஆணையங்கள் அரசு அலுவலகங்களில் மட்டுமே இயங்க வேண்டும்.

மேலும் தற்போது செயல்பாட்டில் உள்ள மற்ற ஆணையங்களையும் ஆய்வு செய்து, அவை தேவையா என்பதை முடிவு செய்ய தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதேபோல் செயல்பாட்டில் உள்ள ஆணையங்களுக்கும் காலவரம்பை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.