பிரேசிலைச் சமாளிக்குமா பெல்ஜியம்?: உலகக் கோப்பை கால்பந்து கால் இறுதி ஆட்டத்தில் இன்று மோதல்

0
0

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் இன்று பிரேசில், பெல்ஜியம் அணிகள் மோதவுள்ளன.

ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இன்று முதல், கால் இறுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இன்று 2 கால் இறுதி ஆட்டங்களும், ஜூலை 7-ம் தேதி 2 கால் இறுதி ஆட்டங்களும் நடைபெறவுள்ளன. 2-வது கால் இறுதி ஆட்டம் கஸான் நகரிலுள்ள ஸ்டேடியத்தில் இரவு 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

5 முறை உலகக் கோப்பையை வென்றுள்ள பலம் வாய்ந்த பிரேசில் அணியை, இன்றைய கால் இறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் எதிர்த்து விளையாட வுள்ளது.

5 முறை உலக சாம்பியன், உலகத் தரம் வாய்ந்த வீரர்கள், உலகிலேயே அதிக விலைமதிப்புமிக்க கால்பந்து வீரர் நெய்மர் என பல நட்சத்திர அந்தஸ்துடன் பிரேசில் களமிறங்குகிறது. லீக் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடிய பிரேசில், நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் மெக்சிகோவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.

நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் நட்சத்திர வீரர் நெய்மர் ஒரு கோலடித்தார். மேலும் சக வீரர் ராபர்டோ புர்னிமோ கோலடிக்கவும் அருமையான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். இதனால், நெய்மரின் தலைமையில் அரை இறுதிக்கு முன்னேறும் நோக்கத்துடன் பிரேசில் களமிறங்குகிறது.

பிரேசிலின் தாக்குதல் ஆட்டத்தை, சமாளிப்பது பெல்ஜியம் அணிக்கு நிச்சயம் கடினமான விஷயமாக இருக்கும்.

பிரேசில் அணியின் நெய்மர் தவிர சென்டர் பேக் ஆட்டக்காரர்கள் ஜோவா மிரண்டா, தியாகோ சில்வா ஆகியோரும் நடுகளத்தில் தங்களது திறமைகளை நிரூபிக்கக் காத்திருக்கின்றனர். மேலும் பிரேசிலின் டக்ளஸ் கோஸ்டா, ரெனடா அகஸ்டோ, பிலிப் லூயிஸ், மிரண்டா ஆகியோரும் அணிக்கு பெரும் பலமாகவுள்ளனர்.

இதனால் பிரேசிலை வீழ்த்த பெல்ஜியம் நிச்சயம் போராட வேண்டியிருக்கும். அதே நேரத்தில் கால் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறுவது என கங்கணம் கட்டிக் கொண்டு களம் புகவுள்ளது பெல்ஜியம்.

போட்டி குறித்து பெல்ஜியம் அணி பயிற்சியாளர் ராபர்ட்டோ மார்ட்டினஸ் கூறும்போது, “பிரேசில் அணி பலம் வாய்ந்தது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அந்த அணியை வீழ்த்துவதற்கு நாங்கள் வியூகங்கள் வைத்திருக்கிறோம். இந்த கால் இறுதி வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பு. அதை நாங்கள் தவற விடமட்டோம். இதை பெல்ஜியம் அணிக்கு கிடைத்த பொற்காலம் என்றுதான் நான் சொல்வேன். பெல்ஜியம் அணி வீரர்களுக்கு இது ஒரு கனவு ஆட்டமாக இருக்கும். அந்த கனவை நனவாக்க அனைத்து வீரர்களும் முயல்வர். நாக்-அவுட் சுற்றில் ஜப்பானை வீழ்த்தியதும் நாங்கள் பிரேசிலுடன் மோதுவது என்பது முடிவாகிவிட்டது.

இதற்காக எங்கள் வீரர்கள் காத்திருக்கிறார்கள். இந்தப் போட்டியில் பிரேசிலை எதிர்த்து விளையாடுவது என்பது சவால்தான். எங்கள் ஆட்ட நுணுக்கங்களில் எந்த ரகசியமும் இல்லை. எங்களைப் பாதுகாத்துக் கொண்டு பிரேசிலுக்கு தண்டனை தருவோம். தோல்விதான் அந்த தண்டனை பந்து எங்களிடம் கிடைக்கும்போது அதை கோல் வலைக்குள் செலுத்துவோம்” என்றார். – ஏஎப்பி