பிரான்ஸ் வெற்றி கால்பந்தாட்டத்துக்கு வெட்கக் கேடு: பெல்ஜியம் கோல் கீப்பர் கோர்ட்வா கடும் சாடல்

0
0

உலக சாம்பியனாகும் அணி என்ற அடையாளத்துடன் நுழைந்த பெல்ஜியம் அணி அரையிறுதியில் பிரான்ஸுக்கு எதிராக 1-0 என்று தோற்று வெளியேறியது, இதனையடுத்து பெல்ஜியம் கீப்பர் திபாவ் கோர்ட்வா பிரான்ஸ் வெற்றி பெற்றது கால்பந்துக்கு வெட்கக் கேடு என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

பிரான்ஸின் செண்டர் பேக் சாமுவேல் டீட்டியின் 51வது நிமிட தலைமுட்டு கோல் சம்பாவிதமாக பிரான்சின் 1-0 வெற்றிக்குக் காரணமானது. அதன் பிறகு கடும் தடுப்பாட்டம் மற்றும் வாய்ப்பு கிடைக்கும் போது எதிர்த்தாக்குதல் என்று பிரான்ஸ் 1998-ன் சாம்பியன் பெருங்கனவை மீண்டுமொருமுறை தட்டி எழுப்பியுள்ளது.

இந்நிலையில் பெல்ஜியம் கோல் கீப்பர் திபாவ் கோர்ட்வா கடும் காட்டமாகத் தாக்கியுள்ளார்:

மிகவும் வெறுப்பான மேட்ச். பிரான்ஸ் விளையாடவே இல்லை, 11 வீர்ர்களையும் தடுப்பாட்டக் காரர்களாக நிறுத்தியது. கோலிலிருந்து 40 அடி தூரத்தில் 11 வீரர்களையும் நிறுத்தியது இது என்ன ஆட்டமா?

தன் மகள் அட்ரியானோவுடன் பெல்ஜியம் கோல் கீப்பர் கோர்ட்வா.| ஏ.எப்.பி.

 

ஆனால் கிலியான் பாப்பேயை வைத்து எதிர்த்தாக்குதல் முயன்றது, பாப்பே மிகவும் விரைவானவர், இது அவர்கள் உரிமை. நாங்களும் மிகவும் உள்ளே சென்று விட்டோம். அங்குதான் எங்களுக்கும் பிரச்சினைகள் எழுந்தன.

ஏன் வெறுப்பு எனில் எங்களை விட சிறந்த அணி வெற்றி பெற்றிருந்தால் கவலையில்லை, ஒன்றுமே ஆடாத பிரான்ஸ், ஒன்றுமேயில்லாத பிரான்ஸ் வெற்றி பெற்றதுதான் வெறுப்பாக இருக்கிறது.

உருகுவேவுக்கு எதிராக காலிறுதியில் ஃப்ரீ கிக்கில் அதுவும் கோல் கீப்பிங் பிழையில் கோல் அடித்தது பிரான்ஸ். எங்களுகு எதிராக கார்னர் வாய்ப்பில் கோல். பெல்ஜியம் வெற்றி பெறாதது கால்பந்தாட்டத்துக்கு வெட்கக் கேடு, பிரான்ஸ் வெற்றி பெற்றதும் கால்பந்துக்கு வெட்கக்கேடு” என்றார் கோர்ட்வா.