பிரமாதம்! இந்திய அணி வெற்றி: கோப்பையை அள்ளியது கோலி படை: இங்கிலாந்தை சதத்தால் மிரட்டிய ரோகித் சர்மா

0
0

 

ரோகித் சர்மாவின் காட்டடி சதம், ஹர்திக் பாண்டியாவின் ஆல்ரவுண்ட் திறமை ஆகியவற்றால், பிரிஸ்டோல் நகரில் நேற்று நடந்த 3-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து 2-1 என்ற கணக்கில் கோப்பையை வென்றது கோலி தலைமையிலான இந்திய அணி.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்தது. 199 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.4 ஓவர்களில் 201 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி தொடர்ந்து 6-வது முறையாக கைப்பற்றும் டி20 தொடர் இதுவாகும். அதுமட்டுமல்லாமல், 199-ரன்களுக்கு மேல் டி20 போட்டியில் சேஸிங் செய்து இந்திய அணி வெற்றி பெற்றது இது 3-வது முறை.

தோனி சாதனை

இதில் முத்தாய்ப்பாக, டி20 வரலாற்றிலேயே ஒரே இன்னிங்ஸில் 5 கேட்சுகளைப் பிடித்த முதல் விக்கெட் கீப்பர் எனும் பெருமையை நம்ம “தல” தோனி நேற்று படைத்தார்.

வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த ரோகித் சர்மா, இந்த போட்டியில் அடித்த சதம், டி20 போட்டியில் அடித்த 3-வது சதமாகும். டி20 போட்டியில் 3 சதங்கள் அடித்த சர்வதேச அளவில் 2-வது வீரர் எனும் பெருமையையும், முதல் இந்திய வீரர் எனும் சாதனையையும் ரோகி்த் சர்மா நேற்றைய போட்டியில் படைத்தார். இதற்கு முன் காலின் முன்ரோ(நியூசி) 3 சதங்கள் அடித்துள்ளார்.

மிக முக்கியமாக ரோகித் சர்மா 14 ரன்கள் சேர்த்த போது, டி20 போட்டியில் 2 ஆயிரம் ரன்கள் அடித்த 2-வது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார். இதற்க முன் கோலி 2 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார்.

கிரிக்கெட்டில் எத்தனை வகையான ஷாட்கள் இருக்குமோ அதில் அத்தனையயும் நேற்று ரோகித் சர்மாவின் பேட்டிங்கில் பார்க்க முடிந்தது. தொடக்கத்தில் இருந்து கடைசி வரை இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை ரோகித் சர்மா நொறுக்கி எடுத்துவிட்டார்.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோகித் சர்மா 56 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்தார். இதில் 11 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். ஆட்ட நாயகன் விருதையும், தொடர் நாயகன் விருதையும் ரோகித் சர்மாவே பெற்றார்.

 

ஹர்திக் பாண்டியா, இந்திய அணியின் “ஜூனியர் கபில்தேவ்” என்றுதான் அழைக்க வேண்டும். பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் நேற்று அசத்திவிட்டார். முதல் ஓவரில் 22 ரன்கள் கொடுத்தபோதிலும் ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்து கொண்டு அடுத்தடுத்து ஓவர்களில் ஸ்விங் செய்து ரன்னைக் கட்டுப்படுத்தி, 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

அதுமட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் 14 பந்துகளில் 33 ரன்கள் என பட்டையை கிளப்பிவிட்டார். வழக்கமாக கோலிக்கு அடுத்தார்போல், ரெய்னா களமிறங்குவார். ஆனால், ரெய்னா அடித்து ஆட முற்பட்டு விக்கெட்டை இழந்துவிடுவார் எனக் கருதி காட்டடிக்கு சொந்தக்காரர் பாண்டியாவை களமிறக்கினார்கள்.

தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி பாண்டியா பொளந்துகட்டிவிட்டார். தோனியின் வழியைப் பின்பற்றி அருமையான “வின்னிங்ஷாட்” சிக்ஸர் அடித்து ஆட்டத்தை வெற்றியுடன் முடித்துவைத்தார் பாண்டியா

டி20 தொடர் முழுவதும் ஷிகர் தவண் சொதப்பிவிட்டார். ரன்கள் ஏதும் குறிப்பிடும்படியாக சேர்க்கவில்லை. வரும் வியாழக்கிழமை தொடங்க உள்ள ஒரு நாள் தொடரிலாவது தொடக்க வீரருக்கான பொறுமையுடன் தவண் விளையாடுவாரா எனப் பார்க்கலாம்.

கே.எல் ராகுல் தனக்கு கிடைத்த வாய்ப்பை இந்த தொடரில் நன்கு பயன்படுத்தினார். இந்த போட்டியில் சிறிது அவசரப்படாமல் பேட் செய்திருந்தால். ராகுலும், ரோகித் சர்மாவும் சேர்ந்தே வெற்றியை பரிசாக அளித்திருப்பார்கள். ராகுல் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பில் முத்திரை பதித்துவிட்டார்.

பந்துவீச்சில் தொடக்கத்தில் ரன்களை வாரிக்கொடுத்த இந்திய வீரர்கள் கடைசியில் கட்டுப்படுத்தினர். இங்கிலாந்து அணி தொடக்கத்தில் அடித்த வேகத்தைப் பார்த்தால், அணியின் ஸ்கோர் 225 அல்லது 250 ரன்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 198 ரன்களுக்குள் சுருட்டிவிட்டனர் இந்திய பந்துவீச்சாளர்கள் குறிப்பாக ஹர்திக் பாண்டியா தனது முதல் ஓவரில் மட்டுமே 22 ரன்கள் கொடுத்தார். அவர் மொத்தமாக அளித்த 38 ரன்களில் 22 ரன்களை கழித்துப்பார்த்தால், ஹர்திக் 3 ஓவர்களில் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

11 பந்துகளில் ரன்களே கொடுக்காத டாட் பந்துகளாகும். ஆக பாண்டியா தனது பிற்பகுதி ஓவர்களை சிறப்பாகவே வீசியுள்ளார். முதல் ஓவரில் செய்த தவறுகளை எல்லாம் திருத்திக் கொண்டு பந்துகளை அடுத்தடுத்து பாண்டியா ஸ்விங் செய்ததால் எளிதாக விக்கெட்டுகளும் வீழ்ந்தது, ரன்குவிப்பும் கட்டுப்படுத்தப்பட்டது.

தீபக் சாஹர், சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ் ஆகியோர் ரன்களை விட்டுக்கொடுக்காமல் சிறிது கட்டுக்கோப்பாக பந்துவீசி இருந்தால் இங்கிலாந்து ரன்னை இன்னும் குறைத்திருக்கலாம். இங்கிலாந்து அணி இந்த அளவுக்கு ரன்களைக் குவிக்க முக்கியக் காரணம் ஆடுகளம் வறண்ட ஆடுகளம், புற்கள் நிறைந்து, 2வதாக, மைதானம் மிகச்சிறியதாகும். நேராக அடிக்கும் பவுண்டரியும் சிக்ஸரும் நெருங்கிய தொலைவிலேயே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது இதனால், இயல்பாக இரு அணிகளும் ரன்களை விட்டுக்கொடுத்ததில் வியப்படையத் தேவையில்லை.

இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை தொடக்கத்தில் ஜேஸன் ராய், ஜோஸ் பட்லர் வலுவான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். பவர்-ப்ளே ஓவரில் அந்த அணி73 ரன்கள் சேர்த்தது இதுதான் அந்த அணி பவர்பளேயில் சேர்த்த 2-வது சிறப்பான ஸ்கோராகும்.ஆனால், இவர்கள் அமைத்துக்கொடுத்த அடித்தளத்தை அடுத்து களமிறங்கிய வீரர்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை. ரன்ரேட்டை உயர்த்துவதில் மட்டுமே கவனமாக இருந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் விக்கெட் இழப்பைத் தடுக்க முயற்சிக்கவில்லை. போதுமான அனுபவமின்மையும், அவசரத்தனமுமே விக்கெட் இழப்புக்கு காரணமாகும். உதாரணமாக 177 ரன்களுக்கு 5-வது விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அடுத்த 22 ரன்களைச் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்ததை என்ன சொல்வது.

படம். | ராய்ட்டர்ஸ்

 

பந்துவீச்சிலும் அனுபவமான வீரர்கள் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பலவீனமாகவும். குறிப்பாக ஆன்டர்ஸன், ஸ்டூவர்ட் பிராட் இல்லாத குறை தெரிகிறது. பிளங்கெட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் பந்துகள் ஸ்விங் ஆகாமல் ஒரே மாதிரியாகவே வருகிறது. பந்துவீச்சில் வேகத்தோடு, ஸ்விங் செய்தல், ஸ்லோ பவுலிங் போன்றவை முக்கியம். இங்கிலாந்து வீரர்கள் பந்துவீச்சில் அது மிஸ்ஸிங்.

டி20 தொடர் தொடங்குவதற்கு முன்பே ஆஸ்திரேலிய ஜாம்பவான் இயான் சேப்பல் கூறினார், “பந்துவீச்சில் எந்தவிமான பன்முகத்தன்மையும் இல்லாமல் ஒரே மாதிரியாக வீசக்கூடிய பந்துவீச்சாளர்களால் இந்தியாவிடம் தொடரை இங்கிலாந்து அணி இழக்கும்” என்றார் அது உண்மையாகிவிட்டது.

டாஸ்வென்ற இந்திய அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 198 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் ஜேஸன் ராய், பட்லர் இருவரும் தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்களின் பந்துவீச்சை வெளுத்துவாங்கினார்கள். சாஹர், யாதவ், கவுல், பாண்டியா என 4 பேரின் பந்துவீச்சை விளாசித்தள்ளினார்கள்.

அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா வீசிய 6-வது ஓவரில் ஜேஸன் ராய் 2 சிக்ஸர், 2 பவுண்டரி என 22 ரன்கள் சேர்த்தார். யஜுவேந்திர சாஹல் வீசிய 7—வது ஓவரில் பட்லருக்கு சித்தார்த் கவுல் கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார். அதிரடியாக ஆடிய ராய் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். பவர்ப்ளையில் 73 ரன்கள் சேர்த்தனர்.

கவுல் வீசிய 8-வது ஓவரில் பட்லர்(34) ரன்களில் ஆட்டமிழந்தார். சாஹர் வீசிய 10-வது ஓவரில் ஜேஸர் ராய் 67 ரன்கள்(31பந்து) சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும்.

அதன்பின் வந்த ஹேல்ஸ்(30), மோர்கன்(6), ஸ்டோக்ஸ்(14), பேர்ஸ்டோ(25), வில்லி(1) ஜோர்டான்(3), பிளங்கெட்(9) என விரைவாக விக்கெட்டை பறிகொடுத்தனர். இதில் ஹர்திக் பாண்டியா வீசிய 18-வது ஓவரில் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவும், கவுல் வீசிய கடைசி ஓவரில் பிளங்கெட், ஜோர்டானும் ஆட்டமிழந்தனர்.

இந்தியத் தரப்பில் ஹர்திக் 4 விக்கெட்டுகளையும், உமேஷ்யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

199 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய அணி களம் கண்டது. ரோகித் சர்மா, தவண் ஆட்டத்தை தொடங்கினார்கள். ரோகித் சர்மா வில்லி வீசியே முதல் ஓவரிலேயே பவுண்டரி, சிக்ஸர் அடித்து ரோகித் பட்டயை கிளப்பினார். வி்ல்லி வீசிய 3-வது ஓவரில் தவண் அடித்த பந்தை பைன் லெக் திசையில் கேட்சாக மாறியது.

அடுத்து வந்த ராகுல், ரோகித்துக்கு ஈடுகொடுத்து பேட் செய்தார். ஜோர்டான் வீசிய 4-வது ஓவரில் 2 சிக்ஸர், ஒருபவுண்டரி என 16 ரன்கள் விளாசினார் ரோகித். ராகுலும் தன் பங்குக்கு சிக்ஸர்கள்,பவுண்டரி விளாசினார். நீண்டநேரம் நிலைக்காத ராகுல் 19 ரன்களில் பால் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து வீரர் ஜோர்டான் பவுண்டரியில் டைவ் செய்த கேட்ச் அற்புதமானது. 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 41 ரன்கள் சேர்த்தனர்.

3-வது விக்கெட்டுக்கு கோலி, ரோகித்துடன் இணைந்தார். அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 28 பந்துகளில் அரைசதம் அடித்தார். கோலியும், ரோகி்த சர்மாவும் ஒவருக்கு பவுண்டரி, சிக்ஸர் அடித்து ரன் ரேட் குறையாமல் கொண்டு சென்றனர்.

29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்த விராட் கோலி , பந்துவீசிய ஜோர்டானிடம் கேட்ச்கொடுத்து வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 89 ரன்கள் சேர்த்தனர். 4-வது விக்கெட்டுக்கு பாண்டியா, ரோகித்துடன் சேர்ந்தார்.

கடைசி 4 ஓவர்களுக்கு 44 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், இந்த 44 ரன்களை இருவரும் சேர்ந்து 3 ஓவர்களில் அடித்துவிட்டனர். பால் வீசிய 17-வது ஓவரில் பாண்டியா 2 பவுண்டரிகளும், ரோகித் சர்மா ஒரு பவுண்டரியும் விளாசினர்.

வில்லி வீசிய 18-வது ஓவரில் ரோகித் ஒரு பவுண்டரியும், பாண்டியா ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளும் அடித்து பொளந்துகட்டினர். ஜோர்டான் வீசிய 19-வது ஓவரில் ரோகித்சர்மா பவுண்டரி அடித்து 3-வது சத்தை நிறைவு செய்தார். பாண்டியா வின்னிங்ஷாட்டாக சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

ரோகித் 100 ரன்களுடனும், பாண்டியா 14 பந்துகளில் 33 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜோர்டன், பால், வில்லி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்