பிரதமர் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிய வெங்கய்ய நாயுடு: அரிதான சம்பவம்

0
1

மாநிலங்களவையில் பிரதமர் மோடியின் சர்ச்சைக்குரிய பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் சமீபத்தில் நடந்தது. இந்த தேர்தலில பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதாதள வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் வெற்றிபெற்றார்.

இதன் பின் மாநிலங்களவையில் அவரை பிரதமர் மோடி வாழ்த்தி பேசினார். அப்போது ‘‘ இரண்டு ‘ஹரி’கள் இடையே நடந்த தேர்தல் இது. எப்படியாவது வெற்றிபெற்று விட வேண்டும் என்ற எண்ணத்துடன் மிக மோசமான நிலைக்குச் சென்ற காங்கிரஸூக்கு சரியான பாடம் புகட்டப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.

மேலும் காங்கிரஸ் வேட்பாளர் ஹரி பிரசாத் பற்றி சில கருத்துக்களை கூறினார்.பிரதமரின் இந்த பேச்சுக்கு, காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த ஹரி பிரசாத் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். உயர் பதவியில் இருக்கும் ஒருவர் இவ்வாறு பேசுவதை ஏற்க முடியாது எனக் கூறினார்.

இதுதொடர்பாக குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்ய நாயுடுவிடம் முறையிட்டார். இதை ஏற்றுக்கொண்ட வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடியின் சர்ச்சைக்குரிய பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்டார். நாடாளுமன்றத்தில் இதுபோன்ற சம்பவம் மிக அரிதாகவே நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.