பிரணாப் முகர்ஜிக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற வழக்கு: வைகோ மீது குற்றச்சாட்டு பதிவு

0
9

பிரணாப் முகர்ஜிக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உட்பட 56 பேர் நேற்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜராயினர். அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. வைகோவுக்கு எதிராக கோஷமிட்ட வழக்கறிஞர்கள் மீது மதிமுகவினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடியில் என்டிபிஎல் அனல் மின் நிலையம் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 28.2.2009-ல் நடைபெற்றது. அப்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி அடிக்கல் நாட்டினார்.

இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக பிரணாப் முகர்ஜிக்கு வைகோ தலைமையில் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் கருப்பு கொடி காட்ட முயன்றனர். இதையடுத்து வைகோ உட்பட 169 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தூத்துக்குடி 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கில் தொடர்புடைய 10 பேர் இறந்துவிட்டதால், 159 பேர் மீது மட்டும் வழக்கு நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 159 பேரும் நேரில் ஆஜராக நீதித்துறை நடுவர் மன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால், இதுவரை 59 பேர் மட்டுமே சம்மனை பெற்றுள்ளனர். எனவே, சம்மன் வாங்கியவர்கள் மீதான வழக்கை மட்டும் தனியாக பிரித்து விரைவாக நடத்த நீதித்துறை நடுவர் மன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதன் பேரில் இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில், நீதித்துறை நடுவர் பிஸ்மிதா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ உட்பட 56 பேர் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவர் பிஸ்மிதா உத்தரவிட்டார்.

வைகோ நீதிமன்றத்துக்கு வந்தபோதும், வெளியே சென்றபோதும் சில வழக்கறிஞர்கள் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த மதிமுகவினர் வழக்கறிஞர்களைத் தாக்கினர்.