பிக் பாஸ் 2: நாள் 20- போகிறபோக்கில் பொன்னம்பலத்தை சிறையில் தள்ளிய அனந்த்!

0
0

இந்த வார எலிமினேஷனில் குறைவான ஓட்டு வாங்கி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் அனந்த் வைத்தியநாதன்.

எலிமினேஷன் பட்டியலில் இருந்த அனந்த் வைத்தியநாதன், பொன்னம்பலம், பாலாஜி, நித்யா, மும்தாஜ் ஆகியோரில் மும்தாஜ் ஏற்கெனவே காப்பாற்றப்பட்டு விட்டார்.மீதியிருக்கும் நால்வரில் பாலாஜியும் நித்யாவும் காப்பாற்றப்பட்டு விட்டதாக கமல் அறிவித்தார்.

இறுதியாக பொன்னம்பலம், அனந்த் இருவரில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்று மற்ற போட்டியாளர்களிடம் கேட்கப்பட்டது. பெரும்பாலானோர் பொன்னம்பலம் என்றே கூறினார்கள்.

முதலில் பேசிய அனந்த்  “பொன்னம்பலம் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர். அதனால் அவர்தான் இருக்கவேண்டும்” என்று பேசினார்.

அடுத்து பேசிய பொன்னம்பலம் “எனக்கு வெற்றி, தோல்வி தனித்தனியாக தெரியாது. நான் வெளியேறினாலும் பிரச்சினையில்லை. ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். உண்மையாக இருங்கள். இந்த நிகழ்ச்சியை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பார்க்கிறார்கள். வரம்பு மீறாதீர்கள். கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள்” என்று மனதில் இருந்த அனைத்தையும் கொட்டினார்.

 ”பொன்னம்பலம் சொன்ன சில விஷயங்கள் கண்டிப்பாக எடிட் செய்யப்பட்டிருக்கிறது என்பது போட்டியாளர்களின் உரையாடல்கள் மூலம் யூகிக்க முடிந்தது.”

அதை ஆமோதிக்கும் வகையில் பேசிய கமல், “நான் பேச நினைத்ததை பொன்னம்பலம் அப்படியே பேசிவிட்டார். அவர் பேசவில்லையென்றால் நானே பேசியிருப்பேன்” என்று கூறினார்.

இருவரில் வெளியேறப்போகும் போட்டியாளர் அனந்த் என்பதை அறிவித்தார் கமல். கூடவே ஒரு ட்விஸ்ட்டையும் வைத்தார்.

அதாவது வீட்டை விட்டு வெளியேறும் முன் அனந்துக்கு ஒரு சக்தி கொடுக்கப்படுகிறது. அதன் மூலம் இந்த வீட்டில் இருக்கும் யாராவது ஒரு நபரை வெளியே இருக்கும் சிறையில் அடைக்கலாம்.

பொன்னம்பலத்தைத் தேர்வு செய்தார் அனந்த். அதற்கு அவர் சொன்ன காரணம் “ஒரு பெண்ணுக்கு அனைத்து விஷயங்களிலும் உரிமை உள்ளது. அவளுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் தலையிட உரிமை இல்லை. யாஷிகா, ஐஸ்வர்யா பற்றி பொன்னம்பலம் பேசியது(இது எடிட் செய்யப்பட்டு விட்டது) தவறு. அதனால் அவரைத் தேர்வு செய்கிறேன்” என்று கூறினார்.  அனந்தின் பேச்சுக்கு வீட்டில் இருக்கும் இளசுகள் கை தட்டி விசிலடித்து ஆதரவு தெரிவித்தார்கள்.

எலிமினேஷன் முடிந்து யாரும் எதிர்பாராத விதமாக மீண்டும் அகம் டிவி வழியே நுழைந்தார் கமல்.

“இந்த சிறைத் தண்டனை தொடர்பாக எனக்கு கருத்து வேறுபாடு உண்டு. ஒரு பெண் ஆணை விட சிறந்தவளாக இருந்து காட்ட வேண்டும். ஆணும் பெண்ணும் சமம் என்பதற்காக ஆண் செய்யும் தவறை எல்லாம் பெண்ணும் செய்ய வேண்டியதில்லை. அதே போல இந்த வீட்டிற்கென்று சில விதிமுறைகள் உண்டு. அதற்கு ஏற்றார்போல நடந்து கொள்ள வேண்டும். பொன்னம்பலம் இரவில் விழித்திருந்து பார்த்ததை அனந்த் பார்க்கவில்லை” என்று பேசினார்.யாஷிகா, ஐஸ்வர்யா முகத்தில் ஈயாடவில்லை. (ஏதோ பெருசா நடந்திருக்கும் போல..)

“நீங்கள் இந்த வீட்டிற்கு மக்கள் மனதில் இடம்பிடிக்க வந்துள்ளீர்கள். ஆனால் அதற்கான முயற்சியை இதுவரை யாருமே எடுக்கவில்லை. நீங்கள் நீங்களாக இருங்கள்” என்ற அறிவுரையுடன் விடைபெற்றார் கமல்.

இன்று வெளியாகியிருக்கும் புரோமோ வீடியோவில் பொன்னம்பலம் சிறையில் இருக்கிறார். அவரிடம் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கோபமாக வாதம் செய்வது போல காட்டப்படுகிறது.

(தொடரும்)