பிக்பாஸ்-2, குப்பையைக் கொட்டிய ஐஸ்வர்யாவை கமல் கண்டிப்பாரா? ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் பார்வையாளர்கள்

0
0

பிக்பாஸ்-2-ல் பாலாஜி மீது குப்பையைக் கொட்டிய ஐஸ்வர்யாவை கமல் கண்டிப்பாரா? என்று பார்வையாளர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

பிக்பாஸ் மற்றும் பிக்பாஸ்-2 –க்கும் ஆறு வித்யாசம் சொல்லுங்கள் என்றால் 60 வித்யாசத்தை பார்வையாளர்கள் கூறுவார்கள். காரணம் பிக்பாஸ்-2-ன் மீது அவ்வளவு விமர்சனம். பிக்பாஸ் ஒன்றில் பண்பாட்டுடன் விளையாடிய போட்டியாளர்கள் கடைசிவரை அதை கடைபிடித்தார்கள்.

தவறு செய்தவர்கள் கண்டிக்கப்பட்டனர். நியாயமாக எவிக்‌ஷன் இருந்தது. ஆனால் பிக்பாஸ்-2 அப்படியே தலைகீழாக சிறு வயது நடிகர் நடிகைகள், போட்டியாளர்களை களமிறக்கி போட்டி, பொறாமை, சண்டை, மனித உரிமை மீறல் என பல நிகழ்ச்சிகள். சுவாரஸ்யமில்லாமல் சென்ற நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை கூட்டுகிறேன் என ஐஸ்வர்யாவுக்கு பெண் சர்வாதிகாரி பட்டம் கொடுக்க அங்கே ஆரம்பித்ததுதான் உச்சக்கட்ட சர்வாதிகாரம்.

பிக்பாஸில் இதுவரை காணாத நிகழ்வுகள் அரங்கேறியது. ஐஸ்வர்யா தனது இத்தனை நாள் தனிப்பட்ட பகையை எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற டாஸ்க் காரணமாக அப்பட்டமாக மீறினார். இதனால் சக போட்டியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் அதைப்பற்றி அவர் கவலைப்படவே இல்லை.

உச்சகட்டமாக பாலாஜி புறம் பேசினார் என்று அவர்மீது குப்பையை கொட்டியது. இதை பார்வையாளர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. வாட்ஸ் அப், பேஸ்புக், வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கின்றனர். கமல்ஹாசன் கண்டிக்காவிட்டால் அவ்வளவுதான் என்கிற அளவுக்கு நெட்டிசன்கள் கொதிக்கின்றனர்.

குப்பையை கொட்டிய அந்த நேரத்தில் பாலாஜி கண்ணீர்விட, மும்தாஜ் கதற, மற்ற போட்டியாளர்கள் விக்கித்து நிற்க எதைப்பற்றியும் ஐஸ்வர்யா கவலைப்படவில்லை. மறு நாள் சென்றாயனை லூசு, நாய் என்று திட்ட இதெல்லாம் டாஸ்கா? என்று அவர் கொதித்து போனார். கருப்பு மூஞ்சி, நாய்கள் என்றெல்லாம் ஐஸ்வர்யா மனம்போனபடி பேசினார்.

கருப்பு மூஞ்சி என்று திட்டுவது என்ன வகையான வார்த்தை என்பது கமலுக்கே வெளிச்சம் என்று நெட்டிசன்கள் கொதிக்கிறார்கள். இங்கு மற்றொரு முக்கியமான விஷயத்தை நெட்டிசன்கள் கூறுகின்றனர். பிக்பாஸை தனது அரசியல் ஆயுதமாக கமல் பயன்படுத்துகிறார் என்று கூறும்போது அரசியல் கட்சித்தலைவராக நாளை கட்சியை வழி நடத்தப்போக்கும் கமல்ஹாசன் இதுபோன்ற விஷயங்களை அனுமதிப்பாரா? என்ற எதிர்ப்பார்ப்பும் இருக்கும்.

ஏற்கனவே பெண்களிடம் சண்டைப்போட்டு அவர்களை தரக்குறைவாக திட்டிய ஆண் போட்டியாளர்களை கமல் கண்டிக்காமல் எளிதாக கடந்து போனார். மும்தாஜிடம் எல்லை மீறிய ஷாரிக்கை கண்டிப்பார் கமல் என்று எதிர்ப்பார்த்தவர்களிடம் மும்தாஜ் அடம் பிடிப்பதாக கூறியதை மிகைப்படுத்தினார்கள். பெண் என்றும் பாராமல் கடுமையாக பயிற்சிகளை அளித்த ஷாரிக்கை கண்டிக்கவில்லை.

இதன் உச்சக்கட்டம்தான் பெண் சர்வாதிகாரி டாஸ்க். இதில் ஐஸ்வர்யா சக போட்டியாளர்களிடம் போட்டியாளராக நடக்காமல் தனது வன்மத்தை காண்பித்தார், அவமானப்படுத்தினார். இதை யாரும் ரசிக்கவில்லை. பிக்பாஸ் அரங்கிற்குள் வந்த நடிகர் தினேஷ் நான் இதை ரசிக்கவில்லை என்று கூறினார்.

டாஸ்க் முடிந்த பின்னர் பிக்பாஸ் இதை செய்யச்சொன்னாரா என்று சக போட்டியாளர்கள் கேட்டபோது அப்படி சொல்லவில்லை, உட்சப்பட்சமாக நடக்கலாம் என்று சொன்னார் என்று ஐஸ்வர்யா பதிலளித்தார்.

உச்சப்பட்சம் என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு. சாதாரணமாக கொடூரமான ராணி போல் நடந்திருக்கலாம். ஆனால் ஐஸ்வர்யா தனது பழைய கதைகளை எல்லாம்கூறி 2 நாள் வச்சி செய்வேன், நான் வெளியே போனாலும் பரவாயில்லை என்பது போட்டியில் விளையாடும் மனநிலை இல்லை.

பாலாஜி மீது குப்பையை கொட்டியது வாழ்நாள் முழுதும் அவருக்கு அவமானம் என்று ஆலோசகர் ஜனனியே ஐஸ்வர்யாவிடம் சுட்டிக்காட்டுகிறார். இப்படி உடன் உள்ள போட்டியாளர்களே ஏற்றுக்கொள்ளாத விஷயத்தை பார்வையாளர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள். அப்பட்டமான மனித உரிமை மீறலில் ஐஸ்வர்யா ஈடுபட்டுள்ளார். பாலாஜி மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருக்கும் அளவுக்கு நிலைமை சீரியசாகி உள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகளை சாதாரண ஆங்கராக கமல் பிக்பாஸ் சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையாக இருக்கப்போகிறாரா? அல்லது ஒரு கட்சியின் தலைவராக நாளை அனைவருக்கும் வழிகாட்டும் நபராக இந்த நிகழ்வை எப்படி பார்க்கப்போகிறார் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

ஏனென்றால் பிக்பாஸ் முதல் நிகழ்ச்சியில் மனநலம் பாதித்தவர்களாக நடிக்க வைத்ததை கண்டித்தார். பலமுறை என் கொள்கைக்கு ஒத்துவராத விஷயத்துக்கு நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று தெரிவித்த கமல் வழக்கமான நெறியாளராக இதை கடந்தால் நெட்டிசன்களின் பலத்த எதிர்ப்புக்கு ஆளாவது மட்டுமல்லாமல், கட்சித்தலைவராக இருந்து நிகழ்ச்சியை நடத்தும் கமலின் தலைமைப்பண்பும் கேள்விக்குறியாகும்.

இன்றய ப்ரமோவில் ஆத்திரமாக பேசும் கமல், நீங்கள் நிகழ்ச்சியை பாருங்கள் நான் என் வேலையை பார்க்கிறேன் என்று கோபமாக செல்கிறார். ஆகவே கமல் கண்டிப்பார் என்பது போன்ற காட்சி காட்டப்பட்டுள்ளது. கமல் கண்டிப்பாரா?