பால், தயிர் குறித்து தவறான தகவல்களை பரப்பி பொதுமக்களை பீதியடையச் செய்வோர் மீது சட்டரீதியான நடவடிக்கை -பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை.

0
0

ஆவின் தயிர் பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ள தேதி குறித்து சமூக வலைத்தளங்களில் பரவிய செய்தியை பால் முகவர்கள் சங்கம் கடுமையாக மறுத்துள்ளதோடு தவறான தகவல்களைப் பரப்பி மக்களை பீதியடையச் செய்வோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்துள்ளது.

ஆவின் நிறுவனத்தின் தயிர் பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ள தேதி குறித்து கடந்த 03.08.2018 முதல் சமூக வலைதளங்களில் ஒரு தவறான தகவல் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனர் மற்றும் மாநிலத் தலைவரான க.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

அது என்னவென்றால் கடந்த 03.08.2018 அன்று நண்பர் ஒருவர் 11.00ரூபாய் மதிப்புள்ள ஆவின் தயிர் பாக்கெட்டை வாங்கியிருக்கிறார். (எந்த ஊர் எனத் தெரியவில்லை) அவர் வாங்கிய அந்த தயிர் பாக்கெட்டில் 04.08.2018 என்கிற தேதி மற்றும் அதன் விற்பனை விலையான 11.00ரூபாய் மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. முன்பாதி அச்சிடப்பட்டப் பகுதியில் இருந்த “உபயோகிக்கும் தேதி (Use By Date), அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (MRP)” போன்ற விபரங்கள் தயிர் பாக்கெட்டை துண்டிக்கும் இயந்திரத்தின் தவறால் தனித்தனி தகவலாக மற்றொரு பாக்கெட்டில் பிரிந்திருந்த காரணத்தால் அதன் உண்மை நிலவரம் என்ன என்பதை அறியாத அவர் உடனடியாக தனது முகநூல் பக்கத்தில் ஆவின் நிறுவனத்தை சாடி பதிவிட்டு விட, உடனடியாக நமது சமூக வலைதள கதாநாயகர்கள் பலரும் பொங்கியெழுந்து ஆவின் நிறுவனத்தின் காலாவதியான தயிர் பாக்கெட் என்றும், ரொம்ப வேகமாக போகும் ஆவின் என்றும் மேற்கோள் காட்டி அவருடைய பதிவை திரைக்காட்சியாக (Screen Shot) நகலெடுத்து, அந்த புகைப்படத்தை பதிவிறக்கம் செய்தும் பலருக்கும் பகிரத் தொடங்கி விட்டனர்.

எந்த ஒரு தகவலையோ அல்லது செய்தியையோ நாம் காண நேர்ந்தால் அதன் உண்மை நிலவரம் என்ன என்பதை தெரிந்து கொள்ளவோ, அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ளவோ எவரும் முயற்சி செய்வதில்லை என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சான்றாக அமைந்திருக்கிறது. “கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்” என நம் முன்னோர்கள் விபரம் இல்லாமல் சொல்லி வைக்கவில்லை இது போன்ற பல நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

சரி, இப்போது விஷயத்துக்கு வருவோம்…

ஆவின் நிறுவனம் மட்டுமல்ல தனியார் பால் நிறுவனங்களும் பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகளை பொதுமக்களாகிய நாம் “எத்தனை நாட்கள் வரை வைத்து உபயோகிக்கலாம் என்பதற்கான தேதி” அதாவது “Use By Date” என அதன் தேதியை அச்சிடப்படுவது தான் தற்போதைய வழக்கம்.

உதாரணமாக இன்றைய தேதி ஆகஸ்ட்-5. ஞாயிற்றுக்கிழமையான இன்று காலையில் விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டில் “Use By Date – 05 AUG” என அச்சிடப்பட்டிருக்கும். இந்த பாலினை குறிப்பிடப்பட்டிருக்கும் தேதியில் இரவு 12.00மணி வரை 4° செல்சியஸ் குளிர்நிலையில் வைத்து பயன்படுத்துவது சிறந்தது.

அதுவே இன்று காலையில் விநியோகம் செய்யப்பட்ட ஆவின் தயிர் பாக்கெட்டில் “Use By Date – 10.08.18” என அச்சிடப்பட்டிருக்கும். தயிர் பாக்கெட்டுகளின் விற்பனை மெதுவாகவே இருக்கும் என்பதால் ஆவின் நிறுவனம் தயிருக்கான ஆயுளை 5நாட்கள் வரை நிர்ணயித்துள்ளது.

இதுவே தனியார் நிறுவனங்கள் என்றால் இன்று காலையில் விநியோகம் செய்யப்பட்ட பால் பாக்கெட்டில் “Use By Date – 06/08/18” எனவும், தயிர் பாக்கெட்டில் “Use By Date – 12.08.18” எனவும் அச்சிடப்பட்டிருக்கும்.

ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்கள் என எந்த நிறுவனங்களாக இருந்தாலும் பால், தயிர் பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ள தேதியன்று நள்ளிரவு 12.00மணி வரை 4° செல்சியஸ் குளிர்நிலையில் குளிர்சாதனப் பெட்டியில் முறையாக வைத்து தாராளமாக பயன்படுத்தலாம்.

அப்படி பொதுமக்களில் எவருக்கேனும் சந்தேகம் வருமாயின் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க அல்லது தங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய பால் மற்றும் தயிர் பாக்கெட்டில் இலவச தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த இலவச வாடிக்கையாளர் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். அல்லது தங்களுக்கு அருகில் உள்ள பால் முகவர்களையோ, எங்களது சங்கத்தின் நிர்வாகிகளையோ தொடர்பு கொள்ளுங்கள். இவை முடியவில்லை என்றால் கீழ்க்காணும் எனது தொலைபேசி எண்களை (9600131725 / 9566121277) எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.

அப்படியும் உங்களின் சந்தேகம் தீரவில்லை என்றால் உணவு தரக்கட்டுப்பாட்டு துறையின் ஆய்வகங்களுக்கு அதன் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். அத்துடன் உரிய மாதிரிகளோடு சுகாதாரத்துறைக்கு புகார் செய்யுங்கள்.

அதையெல்லாம் விடுத்து கண்ணால் கண்டதெல்லாம் உண்மை என நினைத்து அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்திட முனைந்தால் அவர்கள் மீது எங்களது சங்கத்தின் சார்பில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதிருக்கும் என்பதை ஒரு எச்சரிக்கையாகவே தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.