பாலிவுட்டில் பாயத் தயாராகும் பா.ரஞ்சித்..! | Director Ranjith Bollywood debut!

0
0

சென்னை: காலா இயக்குனர் பா.ரஞ்சித் பாலிவுட்டில் ஒரு வரலாற்று சினிமாவை இயக்க உள்ளார்.

காலா திரைப்படத்தின் வெற்றி இயக்குனர் ரஞ்சித்தை வேறு கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இப்போது ரஞ்சித் பாலிவுட் இயக்குனராக புது அவதாரம் எடுக்க போகிறார்.

அட்டகத்தி திரைப்படம் மூலமாக தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் இயக்குனர் ரஞ்சித். இதுவரை காட்டப்படாத சென்னையின் முகத்தை அழகாக காட்சிப்படுத்தியிருப்பார்.

அதன்பிறகு வந்த மெட்ராஸ் திரைப்படம், அரசியல் பேசியது. தலித்துகளின் அரசியலை நாங்கள் பேசுகிறோம் எனச் சொல்லி பலர் ஆதாயம் தேடுவதிலிருந்து விலகி, தலித்துகளுக்கான அரசியலை தலித்துகளே பேசவேண்டும் என்ற கருத்தியலை தன்னுடைய படங்களின் மூலம் கிடைத்த சந்தர்ப்பங்களில் ஆழமாக வலியுறுத்தினார்.

ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கி, குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் உள்ளார் இயக்குனர் ரஞ்சித்.

இந்த நிலையில், இந்தி தயாரிப்பு நிறுவனமான நமா பிச்சர்ஸ் ரஞ்சித்தின் படங்களைப் பார்த்து வியந்து அவருடைய இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று சினிமாவை ரஞ்சித் இயக்க உள்ளார். நடிகர்கள் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

சினிமாவுக்கு மொழி தடையில்லை… சினிமாவே ஒரு மொழி என்பதால்… பாலிவுட்டிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரஞ்சித்!