பார்மாலின் ரசாயனம் மட்டுமின்றி பிளீச்சிங் பவுடர் கலந்தும் மீன்கள் விற்பனை: உணவு பாதுகாப்பு முன்னாள் ஆணையர் குற்றச்சாட்டு

0
0

பார்மாலின் மட்டுமின்றி பிளீச்சிங் பவுடர் கலந்தும் மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு முன்னாள் ஆணையர் டாக்டர் எஸ்.இளங்கோ குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் பார்மாலின் என்ற ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்த மீன்களைச் சாப்பிடுவதால் உடல்நலம் பாதிக்கப்படுவதாக பரவிய தகவலால், சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மீன் விற்பனை பாதிக்கப்பட்டது. இதையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மீன் மார்க்கெட்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க பிளீச்சிங் பவுடர் கலந்தும் மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநராகவும், உணவுப் பாதுகாப்பு ஆணையராகவும் இருந்த டாக்டர்எஸ்.இளங்கோ கூறியதாவது:

ஆறு, குளம், ஏரி, கிணறுகளில் பிடிக்கப்படும் மீன்கள் எளிதில் கெட்டுப்போகாது. ஆனால், கடலில் பிடிக்கப்படும் மீன்கள் விரைவாக கெட்டுப்போகும் தன்மை கொண்டவை. இதனால், சிலர் 60 சதவீதம் தண்ணீர், 40 சதவீதம் பார்மாலின் கலவையில் கடல் மீன்களை மூழ்க வைத்து எடுக்கின்றனர். பார்மாலின் கலந்த மீன்கள் 15 நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும் என்பதால், இதுபோன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க பார்மாலின் கலக்கின்றனர்.

இதேபோல் மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க தண்ணீர், பிளீச்சிங் பவுடர் கலவையில் மூழ்க வைத்து எடுத்து பதப்படுத்தியும் விற்பனை செய் கின்றனர்.

புற்றுநோய் பாதிப்பு

பார்மாலின் கலந்த மீனை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. தற்போதுதான் கடலில் இருந்து பிடித்துவந்த மீன் போலவே இருக்கும். நல்ல மீனை சமைத்து சாப்பிடும்போது சுவை நன்றாக இருக்கும். இதுவே, பார்மாலின் கலந்த மீனை சமைத்து சாப்பிடும் போது சுவை மாறுபடும். பிளீச்சிங் பவுடர் கலந்த மீனை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். பிளீச்சிங் பவுடர் கலந்திருந்தால் மீன்களில் சிறிய அளவில் துர்நாற்றம் வீசும். பார்மாலின் ரசாயனத்தை மனித உடல் ஏற்றுக் கொள்ளாது. இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல், இரைப்பை, பெருங்குடல், சிறுகுடல், சிறுநீரகம், கண் நரம்புகள் பாதிக்கப்படும். இந்த உறுப்புகளில் புற்றுநோய் வருவதற்கும் அதிகம் வாய்ப்புள்ளது. இதேபோல் பிளீச்சிங் பவுடர் கலந்த மீன்களை சாப்பிட்டாலும் உடல்நலம் பாதிக்கப்படும்.

கேரள மாநிலம் கொச்சியில் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் மீன்களில் ரசாயனம் கலந்திருப்பதை அறிவதற்கான கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் அந்த கருவிகளை பெற்று மீன் மார்க்கெட்களுக்கு சென்று மீன்களில் ரசாயனம் கலந்திருக்கிறதா என்பதை சோதனை செய்யலாம்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் – 2006 சட்டத்தை பயன்படுத்தி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்வளத் துறையும், உணவுப் பாதுகாப்புத் துறையும் விழிப்புணர்வை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு தரமான மீன்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஆதாரம் இல்லை

பார்மாலின், பிளீச்சிங் பவுடரை கலந்தால் மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் என்பதற்கு எந்த ஆராய்ச்சியும், ஆதாரமும் இல்லை. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கவும், உறவினர்கள் வருவதற்கு தாமதமாகும் நேரத்தில் இறந்த உடல்களை பதப்படுத்தவும் பார்மாலின் திரவம் பயன்படுத்தப்படுகிறது. விலங்குகளின் உடல்களும் பார்மாலின் பயன்படுத்தி பதப்படுத்தி வைக்கப்படுகிறது. இதற்குதான் பார்மாலினை பயன்படுத்துகின்றனர்.

சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள அசைவ உணவகங்களில் மீன், நண்டு, இறால் போன்றவற்றை உயிருடன் வைத்திருப்பார்கள். வாடிக்கையாளர்கள் எதை கேட்கிறார்களோ, அதனை உயிருடன் பிடித்து சமைத்துக் கொடுப்பார்கள். ஆனால், நமது நாட்டில் உள்ள எந்த உணவகத்திலும் உயிருடன் இருக்கும் மீன்களை வைத்திருப்பதில்லை. இறந்த மீன்களையே சமைத்துக் கொடுக்கின்றனர்.

இவ்வாறு எஸ்.இளங்கோ கூறினார்.