பாரம்பரிய விவசாயம், விதைகளைப் பாதுகாத்த விவசாயிக்கு பிரேசில் நாடு அழைப்பு

0
2

மரபு வழி விவசாயத்தையும், பாரம்பரிய விதைகளையும் பாதுகாத்து வரும் விவசாயியை சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்க பிரேசில் அரசு சிறப்பு அழைப்பாளராக அழைத்துள்ளது.

கேரள மாநிலம், வயநாடு அருகே கம்மனா பகுதியைச் சேர்ந்த விவசாயி செருவயல் ரமணா. இவரின் குடும்பத்தினர் பரம்பரையாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் இன்னும் தன்னுடைய நிலத்தில் பாரம்பரிய விவசாயத்தையும், உரங்களையும், விதைகளையும் மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார்.

கேரளாவின் பாரம்பரிய நெல், மூலிகைகள், வாசனைத் திரவிய மரங்கள், செடிகள் போன்றவற்றின் 47 வகை விதைகளை இன்னும் பாதுகாத்து அவற்றை உற்பத்தி செய்து மற்றவர்களுக்கு ரமணா வழங்கி வருகிறார். இவரின் செயலைப் பார்த்த பிரேசில் நாட்டில் உள்ள பெலீன் நகரில் உள்ள பெடரல் பல்கலைக்கழகம் இவரைக் கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக அரசு சார்பில் அழைத்துள்ளது.

பெலீனா நகரில் இம்மாதம் 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை இந்தக் கருத்தரங்கு நடக்கிறது. உயிரிதொடர்பியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காமல், சூழலை மாற்றாமல் வாழ்வது குறித்த கருத்தரங்களில் பேசவும், ரமணா நடத்தும் பாரம்பரிய விதை வங்கி குறித்து பேசவும் பிரேசில் செல்கிறார்.

இதற்கு முன், பிரேசில் நாட்டில் உள்ள பயிர்வகை பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை ஆணையம் சார்பில் தேசிய பயிர் பாதுகாப்பு விருது ரமணாவுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கருத்தரங்குக்கு அழைத்துச் செல்லும் சுற்றுச்சூழல் வல்லுநர் சாஜி தாமஸ் கூறுகையில், உலக அளவில் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் சமூகத்தினர் தாங்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து விவாதித்துக் கொள்ளவும், மரபுவழி வேளாண்மை, தொழில்களில் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இந்தக் கருத்தரங்கு நடத்தப்படுகிறது.

சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் எவ்வாறு வாழ்க்கையை நடத்துவது, உலகச் சூழியல் மாற்றம், உணவு, பாலினம், புத்தாக்கம், பாரம்பரிய மருத்துவம், உயிர்சூழியில், உயிர்சூழியில் மேலாண்மை ஆகியவை குறித்து இந்தக் கருத்தரங்கில் ஆலோசிக்கப்பட உள்ளது.

இந்தக் கருத்தரங்கில் கேரளாவில் பாரம்பரியமாக விதை வங்கி நடத்தி வரும் ரமணா அழைக்கப்பட்டுள்ளார். இதில் 50 நாடுகளில் இருந்து 2 ஆயிரம் ஆய்வாளர்கள் பங்கேற்க இருக்கின்றனர் எனத் தெரிவித்தார்.