பாக். கேப்டன் சர்பராஸ் அகமதுவின் நீட்டிய கையைப் புறக்கணித்த கிளென் மேக்ஸ்வெல்

0
0

ஹராரேயில் நடைபெற்ற முத்தரப்பு டி20 இறுதிப் போட்டியில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியபோது ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெலின் விளையாட்டுணர்வற்ற செயல் பலரது கவனத்தையும் ஈர்த்து சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது, அப்போது மேக்ஸ்வெல், ஷோயப் மாலிக்குடன் கைகொடுத்தார். நடுவர்களுக்குக் கைகொடுத்தார், ஆனால் பாகிஸ்தான் வெற்றிக் கேப்டன் சர்பராஸ் அகமது தன் கையை மேக்ஸ்வெலை நோக்கி நீட்டியபோதும் கண்டும் காணாமல் சென்றார் கிளென் மேக்ஸ்வெல், இதனை கேமராவின் கண்கள் படம்பிடித்துக் காட்டியது.

இதனையடுத்து கிளென் மேக்ஸ்வெலின் செயல் சமூகவலைத்தளத்தில் ‘ஆட்ட உணர்வற்ற செயல்’ என்று வர்ணிக்கப்பட்டதோடு, ஆஸ்திரேலியா அணி என்ன மாற்றம் பேசினாலும் செயலில் இன்னும் மாறாத எண்ணம் படைத்தவர்களாகவே இருக்கின்றனர் என்ற தோற்றத்தை உருவாக்கியது.

இந்நிலையில் கிளென் மேக்ஸ்வெல் கூறியதாவது:

“வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணிக்கு என் வாழ்த்துக்கள், பகார் ஜமான், ஷோயப் மாலிக்கை நிறுத்த முடியவில்லை. ஜிம்பாப்வே பயணத்தில் எங்களுக்கு துயர முடிவு. தொலைக்காட்சியில் காட்டப்பட்ட அந்தச் சம்பவம் அதாவது விளையாட்டு உணர்வற்ற செயல் என்று என்னைக் கண்டித்த செயலுக்காக உண்மையில் நான் வருந்துகிறேன். நிச்சயம் நான் அப்படிப்பட்டவன் அல்ல, ஆட்டத்தை இம்மாதிரி அணுகுபவனும் நான் அல்ல.

நான் அவர் கை நீட்டியதைப் பார்க்கவில்லை, நான் சர்பராஸை விடுதியில் சந்தித்து கைகொடுக்க முயற்சி செய்வேன்” என்று கூறியுள்ளார்.

ஆட்டத்தின் போது மேக்ஸ்வெலும் சர்பராஸ் அகமடும் எண்ணற்ற வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். ஆட்டம் முடிந்த பிறகும் கூட சர்பாராசுக்கும் மேக்ஸ்வெலுக்கும் இடையே வார்த்தைப் பரிமாற்றங்கள் இருந்தன.

இதனால்தான் சர்பராஸ் கையை நீட்டிய போதும் அதைப் புறக்கணித்துச் சென்றார் மேக்ஸ்வெல் என்ற விமர்சனம் அவர் மீது எழ அதற்கு அவர் மன்னிப்புக் கேட்டுள்ளார்.