பாகிஸ்தானில் 2 தீவிரவாத தாக்குதல்: தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற கட்சித் தலைவர் உட்பட 90 பேர் பலி

0
0

பாகிஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் நேற்று தீவிரவாதிகள் 2 இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் அரசியல் கட்சி தலைவர் உட்பட 90 பேர் பலியாயினர்.

பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக முக்கிய கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்நிலையில், பன்னு மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கைபர் பக்துன்கவா மாகாண முன்னாள் முதல்வரும், ஜமியத் உலமா இ இஸ்லாம் பஸல் தலைவருமான அக்ரம் கான் துரானி பங்கேற்றார். இவர் கூட்டணி கட்சியான முத்தாஹிதா மஜ்லிஸ் இ அமல் (எம்எம்ஏ) சார்பில் போட்டியிடுகிறார்.

பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு 40 மீட்டர் தொலைவில் துரானி வந்து கொண்டிருந்த போது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் அதிர்ஷ்டவசமாக துரானி உயிர்த் தப்பினார். எனினும், 5 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 30 பேர் காயம் அடைந்தனர்.

இதற்கிடையில் பலுசிஸ்தான் மாகாணம் மஸ்துங் மாவட்டத்தில் நேற்று பிற்பகல் நடந்த தீவிரவாத தாக்குதலில் பலுசிஸ்தான் அவாமி கட்சித் தலைவர் நவாப்ஸதா சிராஜ் ரெய்சானி என்பவர் உட்பட 85 பேர் பலியாயினர். 120 பேர் காயமடைந்தனர் மஸ்துங் பிபி-35 தொகுதியில் போட்டியிடும் ரெய்சானி, பலுசிஸ்தான் முன்னாள் முதல்வர் நவாப் அஸ்லம் ரெய்சானியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் நடந்த 2-வது மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 10-ம் தேதி பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் அவாமி தேசிய கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஹாரூண் பிலோர் உட்பட 20 பேர் பலியாயினர்.

பாகிஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் தாக்குதல் நடத்துவதை தீவிரவாதிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது பிரச்சாரத்துக்கு வந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டா மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.