பழநி கோயில் முருகன் சிலை பலத்த பாதுகாப்புடன் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு: சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைத்திருக்க நீதிபதி உத்தரவு

0
0

பழநி கோயிலில் 2004-ம் ஆண்டு புதிதாக வைக்கப்பட்ட உற்சவர் முருகன் சிலையை கும்பகோணம் நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஒப்படைத்தனர்.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 2004-ம் ஆண்டு புதிதாக வைக்கப்பட்ட உற்சவர் சிலை வடிவமைத்ததில் முறைகேடு நடந்ததாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக கோயில் முன்னாள் இணை ஆணையர் ராஜா, சிலை செய்த ஸ்தபதி முத்தையா உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இதற்கிடையே, சென்னை ஐஐடி பேராசிரியர்கள் மூலம் சிலை வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்ட உலோகங்களின் அளவு குறித்து நவீன கருவிகளை கொண்டு ஆய்வு செய்ய ஐ.ஜி பொன்மாணிக்கவேல் நடவடிக்கை எடுத்தார். மேலும், பழநி கோயிலில் பணிபுரிந்த அதிகாரிகள், குருக்கள் ஆகியோரிடம் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.

வழக்கு விசாரணையின் தொடர்ச்சியாக, சர்சைக்குரிய சிலையை கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்க சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் முடிவு செய்தனர். இதற்காக ஏடிஎஸ்பி ராஜாராம் தலைமையிலான போலீஸார் பழநி வந்தனர்.

இதையடுத்து, கடந்த 14 ஆண்டுகளாக பழநி கோயிலில் சிலைகள் மற்றும் ஆபரணங்கள் பாதுகாப்பு அறையில் ‘டபுள் லாக்கரில்’ வைக்கப்பட்டிருந்த அந்த சிலை நேற்று முன்தினம் வெளியே எடுக்கப்பட்டு, கோயில் தலைமை குருக்கள் அமிர்தலிங்கம் தலைமையில் பாரவேல் மண்டபத்தில் வைத்து சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

பின்னர் நேற்று காலை பழநி கோயில் நிர்வாகத்தினர் சிலையை வட்டாட்சியர் சரவணக்குமார் முன்னிலையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். சிலையை பெட்டியில் வைத்து பலத்த பாதுகாப்புடன் கும்பகோணத்துக்கு போலீஸார் எடுத்துச் சென்றனர். பழநி கோயில் உதவி ஆணையர் செந்தில், மேலாளர் செல்வராஜ், கோயில் வரைவர் ராஜேஷ் மற்றும் எட்டு சீர்பதம் தாங்கிகள் உடன் வந்தனர்

கும்பகோணம் நீதிமன்ற நீதிபதி முன்பு, முருகன் சிலையை மரப்பெட்டியில் இருந்து வெளியே எடுத்து வைத்தனர்.

221 கிலோ எடை

அதனை நீதிபதி முன்னிலையில் எடை போட்டபோது 221 கிலோ எடையும், 115 சென்டி மீட்டர் உயரமும் இருந்தது. பின்னர், அந்த சிலையை, கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் சிலையை பாதுகாப்பு மையத்தில் நேற்று மாலை வைத்தனர்.

இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராம் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த சிலையை மீண்டும் பழநி கோயிலுக்கு கொண்டு வருவது குறித்து நீதிமன்றம்தான் முடிவு செய்யும் என்றார்.