பருவமழைக்காக மட்டுமே கால்வாய்களில் செடிகள் அகற்றம்: கொசு தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி கவனம் செலுத்துமா?- போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு

0
8

சென்னை மாநகராட்சி சார்பில் பருவமழையை கருத்தில் கொண்டு மட்டுமே மாநகரில் உள்ள கால்வாய்களில் உள்ள செடிகள் அகற்றப்படுகின்றன. ஆனால் கொசுத் தொல்லையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மிதக்கும் கழிவுகளையும், செடி களையும் அகற்ற நடவடிக்கை எடுப்பதில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னை மாநகரப் பகுதியில் மாநகராட்சி கட்டுப்பாட்டில், கேப் டன் காட்டன் கால்வாய், ஓட்டேரி கால்வாய், மாம்பலம் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் என மொத்தம் 30 கால்வாய்கள் உள்ளன. மாநகரப் பகுதியில் மழைக் காலங்களில் மழைநீர் எளிதாக வடிந்து செல்ல இந்த கால்வாய் கள் உறுதுணையாக இருந்தன.

ஆக்கப்பூர்வமான நடவடிக்கை?

இந்தக் கால்வாய்களில் விதிகளை மீறி கழிவுநீர் குழாய்கள் மூலமாக தொடர்ந்து கழிவுநீர் விடப்பட்டு வருவதால் 365 நாட்களும் கழிவுநீர் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதைத் தடுக்க மாநகராட்சி சார்பில் இதுவரை எந்த வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்நிலையில், இந்தக் கால்வாய்களில் பொதுமக்கள் குப் பைக் கழிவுகளை வீசுவதாலும், அவற்றில் வளரும் ஆகாயத் தா மரைச் செடிகள் மற்றும் கோரை புற்களாலும் கழிவுநீர் தேக்கம் அடைந்து, அதில் கொசுக்கள் உற்பத்தியாக ஏதுவாகிறது. கழிவுநீர் தேங்காமல் சென்றால் கொசுக் கள் உற்பத்தியாக வாய்ப்பில்லை என்பதை மாநகராட்சி நிர்வாகம் உணர்ந்திருந்தது.

இதற்கிடையில் கடந்த 2013-ம் ஆண்டில், அனைத்து கால்வாய் களிலும் இருந்த கழிவுகளையும், செடிகளையும் மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது. அதன் காரண மாக அந்த ஆண்டு கொசுத்தொல்லை சென்னையில் பரவலாகக் குறைந்தது. ஆனால் அடுத்து வந்த ஆண்டுகளில் அந்த முறை கடைபிடிக்கப்படவில்லை.

அதனால் சென்னையில் ஆண்டு முழுவதும் கொசுக்களின் தொல்லை இருந்து வருகிறது. வட சென்னை பகுதிகளான கொருக்குபேட்டை, தண்டையார்பேட்டை, கொடுங்கையூர், வியாசர்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக இருப்பதாக குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோரைப் புல்

மாநகராட்சி சார்பில், வெள்ளம் ஏற்படாமல் மழைநீர் வழிந்தோடுவதற்காக மட்டுமே பருவ மழைக்கு முன்பாக கால்வாய்களில் உள்ள கழிவுகளும், செடிகளும் அகற்றப்படுகின்றன. நேற்று கூட வியாசர்பாடி மகாகவி பாரதி நகர் பகுதியில் கேப்டன் காட்டன் கால்வாயில் ஆளுயரத்துக்கு வளர்ந்திருந்த கோரை புற்கள் அகற்றப்பட்டன.

ஆனால், இவ்வாறு செடிகள் வளர்ந்தால் கொசுக்கள் உற்பத்தியாகும் என்பதை மாநகராட்சி நிர்வாகம் உணர்ந்திருந்தும் அதை அகற்றுவதில்லை. எனவே, ஆண்டு முழுவதும் அனைத்து கால்வாய்களிலும் கழிவுப் பொருட்களும், செடிகளும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண் டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

இயந்திரத்தால் பலனில்லை

கால்வாயில் உள்ள செடிகள், புற்களை அகற்றுவதற்காகவே பின்லாந்தில் இருந்து, நீர் மற்றும் நிலத்தில் இயங்கக்கூடிய ஆம்பிபியன் இயந்திரமும், 3 ரோபாடிக் இயந்திரங்களும் வாங்கப்பட்டன. இருப்பினும் கால்வாய்களில் செடிகள் வளர்வதைத் தடுக்க முடியவில்லை. அதனால் கொசுத் தொல்லை இதுவரை ஒழிக்கப்படவில்லை.

நவீன இயந்திரங்கள் இயக்கப்படுவதை அதிகாரிகள் யாரும் கண்காணிப்பதில்லை. பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான அடையாறிலும், கூவத்திலும் தான் அந்த இயந்திரங்கள் இயக்கப்படுகின்றன என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “30 கால்வாய்களிலும் ஆண்டு முழுவதும் குப்பைக் கழிவுகள், செடிகள் இல்லாத வகையில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.