”பம்பரமாய் ஓடி ஓடி வேலை பார்க்குறீங்க கலெக்டரம்மா, மகிழ்ச்சியா இருக்கு”; கருணாநிதியிடம் வாங்கிய முதல் பாராட்டு: அமுதா ஐஏஎஸ் நெகிழ்ச்சிப் பேட்டி

0
0

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணிக்கு மறைந்த திமுக தலைவரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்யலாம் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு, மறுநாள் காலை 10.45 மணியளவில் தான் வருகிறது. அதுவரை கருணாநிதி இறந்ததிலிருந்து சுமார் 16 மணிநேரம் அவர் உடல் எங்கு அடக்கம் செய்யப்பட உள்ளது என்பதில் தெளிவின்மை நிலவிவந்தது.

 8 ஆம் தேதி காலையில் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்படும் வரை பல்வேறு பணிகளை தமிழக அரசு அதிகாரிகளுக்கு பிரித்துக் கொடுத்திருக்கின்றது. அதில், கருணாநிதியை அடக்கம் செய்யும் இடத்தின் பொறுப்பாளராக, உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.

மற்ற அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளைவிட அமுதாவுக்கு வழங்கப்பட்டது இன்னும் கூடுதலான சவால் நிறைந்தது என்றே சொல்லலாம். ஏனென்றால், உயர் நீதிமன்ற உத்தரவு வந்ததிலிருந்து கருணாநிதி உடல் அடக்கம் செய்வதற்கான நேர இடைவெளி மிகவும் குறைவு. அதனாலேயே, அமுதாவின் அன்றைய பணிகளை பலரும் நேரடியாகவும், சமூக வலைதளங்களிலும் பாராட்டி வருகின்றனர்.

கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட போது உளப்பூர்வமாக அமுதா சவக்குழியில் மண் அள்ளிப்போட்டதும், கைகூப்பி வணங்கியதும் உணர்வுப்பூர்வமான தருணமாக அமைந்தது. இந்தப் பணி தனக்கு வழங்கப்பட்டது குறித்தும், கருணாநிதியின் இறுதி நிமிடங்களில் தன் பங்கு குறித்தும் நம்மிடம் பேசினார் அமுதா ஐஏஎஸ்.

கருணாநிதி உடல் அடக்கத்தின்போது கைகூப்பி வணங்கும் அமுதா ஐஏஎஸ்

 

”ஐஏஎஸ் அதிகாரியாக நிறைய பணிகளைச் செய்திருக்கிறேன். வெள்ள நிவாரணப் பணிகள், சட்டம் – ஒழுங்கு பணிகள், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் என எந்தப் பணியாக இருந்தாலும், அரசாங்கம் நமக்கு கொடுக்கும் பணிகளை செவ்வனே செய்ய வேண்டும். இதுதான் என்னுடைய பாலிஸி.

மறைந்த தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்வது மற்றும் அது சம்பந்தப்பட்ட பணிகள் எனக்கு வழங்கப்பட்டது எனக்கு கிடைத்த வாய்ப்பு. அதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இருக்கும் குறைந்த நேரத்தில் எவ்வளவு சிறப்பாகச் செய்ய முடியுமோ அதனை பல்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் குழப்பங்களின்றிச் செய்து முடித்துள்ளோம்.

எங்களுக்கு நேரம் தான் குறைவாக இருந்தது. மெரினாவில் அவரது உடலை அடக்கம் செய்யலாம் என உயர் நீதிமன்ற உத்தரவு வந்தவுடன் அதற்கான பணிகளை தொடங்கலாம் என தமிழக அரசு எங்களிடம் தெரிவித்தது. அப்போதிலிருந்து 5-6 மணிநேரங்கள் மட்டுமே எங்களுக்கு இருந்தது. குறுகிய நேரத்தில் குழப்பம் இல்லாமல் இதனைச் செய்வது சவாலாக இருந்தது.

பொதுப்பணித் துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், சர்க்கரைத் துறை இயக்குநர் அனு ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகளும் கருணாநிதியின் நல்லடக்கப் பணிகளை மேற்கொண்டவர்களில் முக்கியமானவர்கள். காவல்துறை, சென்னை மாநகராட்சி, பொதுப்பணித் துறை என பலதுறை அதிகாரிகளும் தனக்கு நல்ஒத்துழைப்பை வழங்கினர்” எனக் கூறுகிறார் அமுதா.

பணிகளை மேற்கொள்ளும் அமுதா ஐஏஎஸ்

 

தமிழக அரசின் சார்பில் விஐபிக்கள் வருகைக்கான முன்னேற்பாடுகள், நல்லடக்கம் செய்வதற்கான முன்னேற்பாடுகள், ராணுவ மரியாதை செய்வதற்கான அடிப்படை பணிகள் ஆகியவற்றை ஐஏஎஸ் அதிகாரி அமுதா முழுமையாக ஒருங்கிணைத்தார். மேலும், மாலையில் நல்லடக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்கியபோதும் வரிசையாக என்னென்ன செய்ய வேண்டும் என்ற நிகழ்வுகளை மு.க.ஸ்டாலின், அவரது குடும்ப உறுப்பினர்கள், ராணுவ அதிகாரிகளிடம் தெரிவித்து வந்தார்.

அதேபோல், திமுகவினரும் குறிப்பாக திமுக துணை பொதுச் செயலாளர் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர் பாபு மூவரும் தீர்ப்பு வந்தவுடனேயே உடனடியாக ராஜாஜி ஹாலில் இருந்து புறப்பட்டு மெரினாவில் அண்ணா நினைவிடத்தின் பின்புறத்தில் கருணாநிதியை அடக்கம் செய்வதற்கான இடத்தைப் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.

கருணாநிதியின் உடல் நல்லடக்கத்தின் போது இறுதி மரியாதை செய்தது குறித்து பகிர்ந்துகொண்ட அமுதா ஐஏஎஸ், “நான் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவள். தமிழ்நாட்டின் முதல்வர்களாக இருந்த அனைவரிடத்திலும் எனக்கு மரியாதை உள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஐயாவின் இறுதிச்சடங்கிலும் நான் தன்னார்வத்துடன் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதும் எனக்கு மரியாதை உண்டு. அவருடைய இறுதிக் காலத்திலும் அப்போலோ மருத்துவமனையில் பணிகளைச் செய்தேன்.

கருணாநிதி தமிழகத்தின் மிக முக்கிய தலைவர். அவர் ஆட்சிக்காலத்தில் நான் பணியாற்றியிருக்கிறேன். என்னுடைய பணிகள் பலவற்றை அவர் பாராட்டியிருக்கிறார். நான் எப்போதெல்லாம் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறேனோ அப்போதெல்லாம் அவர் என்னை வெகுவாகப் பாராட்டுவார். நீண்ட காலத்திற்கு நான் அவருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். அந்தவகையில் இயல்பாகவே அவருடன் எனக்கு பிணைப்பு இருந்தது. அவருடைய இறுதிச்சடங்கில் நான் இருந்தது எனக்கும் மிகவும் உணர்வுப்பூர்வமான தருணமாக இருந்தது” என உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார் அமுதா.

சுனாமியின் போது நிவாரணப் பணிகள், சென்னை வெள்ளத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கர்ப்பிணிப் பெண்களையும், குழந்தைகளையும் மீட்டது என தன் பணியில் பல சாதனைகளைப் புரிந்த அமுதா ஐஏஎஸ், கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக குடிமைப் பணியில் இருந்து வருகிறார். திமுக, அதிமுக என இரு கட்சிகளின் ஆட்சிக்காலத்திலும் இவர் பணியாற்றியிருக்கிறார்.

கருணாநிதியுடனான சில நிகழ்வுகளை நினைவு கூர்ந்த அமுதா, தன் சாதனைகளை கூற இது தகுந்த நேரமல்ல எனவும் மென்மையாக மறுக்கிறார்.

“1996-ல் கடலூரில் துணை ஆட்சியராக பணியில் சேர்ந்தேன். அப்போது, பணியில் சேர்ந்த 3 மாதக் காலத்திலேயே அங்கு ஏற்பட்ட வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டேன். அப்போது, நிவாரணப் பணிகளை பார்வையிட வந்த அப்போதைய முதல்வர் கருணாநிதி, ஓடிஓடி பம்பரமாகச் சுற்றி வேலை பார்க்குறீங்க கலெக்டரம்மா. பெண்கள் இத்தகைய பணிகளை சிறப்பாக செய்வது சந்தோஷமாக இருக்கிறது எனப் பாராட்டினார். அவரிடமிருந்து வாங்கிய முதல் பாராட்டு அது.

1997 இல் திருநீர்மலையில் சட்டவிரோதமாக இயங்கிய குவாரியை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்தோம். அப்போது இதுகுறித்து சட்டப்பேரவையில் சாதாரண பெண் அதிகாரியை இத்தகைய கடினமான பணிக்கு அனுப்பியதாக முதல்வரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘அவர் சாதாரண அதிகாரி கிடையாது. நேர்மையான, தைரியமான அதிகாரி’ எனத் தெரிவித்தார். எனக்கு அதிரடி அதிகாரி என பெயர் வைத்ததே அவர்தான். அந்த மாதிரி பல தருணங்கள் உண்டு.

ஆனால், இந்தத் தருணத்தில் என் பணிகள் குறித்து பேசுவது பொருத்தமாக இருக்காது. மறைந்த தலைவரின் பெருமைகளைத் தான் நாம் பேச வேண்டும். அரசுப் பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு, பஞ்சாயத்துகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு, பெண்களுக்கு சொத்துரிமை ஆகியவற்றை என்றென்றும் நாம் நினைவுகூர்தல் வேண்டும்” என்கிறார் அமுதா.