‘பணமதிப்பு நீக்கம் போல் பாஜகவுக்கு 2019 தேர்தலில் அதிர்ச்சி கிடைக்கும்’: சிவசேனா கட்சி கணிப்பு

0
0

2016-ம் ஆண்டு பாஜக அரசு நாட்டில் கொண்டுவந்த பணமதிப்பு நீக்க அதிர்ச்சியைப் போன்று, 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது என்று சிவசேனா கட்சி கணித்துள்ளது.

சிவசேனாக் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாம்னா’வில் இன்று தலையங்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:

நாட்டில் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு ஆதரவான சூழல் அனைத்து மாநிலங்களிலும் உருவாகிக்கொண்டு இருக்கிறது. மக்கள் தங்கள் மனநிலையை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகவே மாற்றிக்கொண்டு, பாஜகவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கக் காத்திருக்கிறார்கள்.

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கூட்டணி, டெல்லிக்கு பாஜக செல்லும் வழியில் மிகப்பெரிய தடையை உருவாக்கியுள்ளது.

இதேபோல பிஹாரில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியும் மற்ற கட்சிகளும் பாஜகவுக்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தி இருக்கின்றன. இவை அனைத்தும் உணர்த்துவது மத்தியில் மிகப்பெரிய அதிகார மையம் மாற்றத்துக்கான அறிகுறியாகும்.

அரசியல் வல்லுநர்கள் கணிப்பின்படி 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் , கடந்த 2014-ம் ஆண்டைப் இல்லாமல் தலைகீழ் மாற்றம் ஏற்படும். கடந்த 2014-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு கிடைத்த இடங்களில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு தோல்வியைச் சந்திக்கும் என்று கணித்திருக்கிறார்கள்.

மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், பிஹார், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிரான அலையே மக்கள்மத்தியில் இருக்கிறது.

பாஜக அரசின் வெற்று வாக்குறுதிகள், பிரிவினைவாதம், வன்முறையைத் தூண்டுதல் போன்றவை மக்களுக்குத் தெரிந்து விழிப்புணர்வு அடைந்துவிட்டார்கள். பாஜகவின் ஏமாற்றுத்தனத்தையும், வெற்று வாக்குறுதிகளையும் ஒவ்வொரு மாநில மக்களும் உணரத் தொடங்கிவிட்டனர். கடந்தகால வாக்குறுதிகளுக்குப் பதில் கேட்கத் தொடங்கும்போது, அவர்களிடையே சாதிப்பிரிவினையை பாஜக ஏற்படுத்திக் குழப்புகிறது.

தங்களுக்குப் பின்னடைவு ஏற்படுவதை உணர்த்த பாஜகவினர், முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். சாதாரணமான சூழலில் இதுபோன்ற அவசரத்தை பாஜக கொண்டிருந்தால் யாரும் அது குறித்து கவனிக்கப்போவதில்லை. ஆனால், தேர்தலுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே பாஜக தீவிரமாகப் பிரச்சாரத்தில் களமிறங்கி இருக்கிறது.

ஜனநாயகத்தை வலுப்படுத்துவது குறித்து மக்கள் உணர்கிறார்கள். ஆதலால், தார்மீக அடிப்படையில், பிரச்சாரங்களில் இருந்து பிரதமரும், மாநில முதல்வரும் கண்டிப்பாக ஒதுங்கி இருக்கவேண்டும். மக்கள் உங்களைச் சேவையாற்ற தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள், உங்கள் கட்சிப்பணிகளை செய்வதற்குத் தேர்வு செய்யவில்லை.

தங்களை ஏமாற்றுகிறார்கள் அரசியல்வாதிகள் எனத் தெரிந்தால், மக்கள் அவர்களுக்கு எப்படி பாடம் புகட்டவேண்டும் என்பதை அறிந்து அதைச் செய்வார்கள். மக்களுக்கு எப்படி பணமதிப்பு நீக்கம் அதிர்ச்சி அளித்ததோ அதேபோன்ற அதிர்ச்சியை பாஜகவுக்கு மக்கள் அளிப்பார்கள்

இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.