பஞ்சாபில் அரசு ஊழியர்களுக்கு போதை மருந்து பரிசோதனை: முதல்வர் அம்ரீந்தர் சிங் உத்தரவு

0
0

பஞ்சாபில் போலீஸார் உட்பட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் போதை மருந்து பரிசோதனை செய்ய முதல்வர் அம்ரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

பஞ்சாபில் சமீபத்தில் நடந்த மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் போதை மருந்து கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் போதை மருந்து தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில், மாநிலத்தின் அரசு ஊழியர்கள் 3.5 லட்சம் பேருக்கும் போதை மருந்து பரிசோதனை நடத்த முதல்வர் அம்ரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். போலீஸாருக்கும் போதை மருந்து பரிசோதனை பொருந்தும்.

அரசு ஊழியர் நியமனம், பதவி உயர்வு மற்றும் குறிப்பிட்ட சில ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் நடக்கும் மருத்துவ பரிசோதனையின்போது போதை மருந்து பரிசோதனை நடத்த அம்ரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். துப்பாக்கி உரிமம் கோருவோருக்கும் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.