‘நேருக்கு நேர்’ மோதும் பாஜக – திரிணாமுல்: அமித் ஷா வருகை; கொல்கத்தாவில் பதற்றம்

0
0

கொல்கத்தாவில் இன்று நடைபெறும் பாஜக கூட்டத்தில் அமித் ஷா கலந்துகொண்டு உரையாற்றவுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் போட்டி போராட்டம் அறிவித்துள்ளதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

மேற்குவங்க மாநிலத்தில் பாஜகவை பலப்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு போராட்டங்களையும், பேரணிகளையும் பாஜக நடத்தி வருகிறது. வரும் மக்களவை தேர்தலில் மேற்குவங்கத்தில் கணிசமான இடங்களை வெல்லும் வகையில் பாஜக தலைவர் அமித் ஷா இங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அசாம் மாநிலத்தில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு, வங்க மொழி பேசும் மக்களுக்கு எதிரானது எனக் கூறி மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த விவகாரத்தில் நாட்டில் ரத்த ஆறு ஓடும் வகையில் பாஜக செயல்படுவதாக அவர் விமர்சித்துள்ளார்.

இந்த பரபரப்பான சூழலில் கொல்கத்தாவில் இன்று நடைபெறும் பாஜக கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொள்கிறார். இதற்கு காவல்துறை முதலில் அனுமதி மறுத்தது. எனினும் பின்னர் அனுமதி வழங்கப்பட்டு, பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அதேசமயம் அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் போராட்டம் அறிவித்துள்ளது. ‘அமித் ஷா வெளியேறு’ என்ற முழுக்கத்துடன் அவர்களும் போட்டிக்கு பேனர்களும், விளம்பரங்களும் செய்துள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மேற்குவங்கம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் இருகட்சித் தொண்டர்களும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. கூட்டதுக்கு வரும் பாஜகவினருக்கு எதிர் நடவடிக்கைகளில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இறங்கியுள்ளதாக பாஜக புகார் கூறியுள்ளது.

இதனால் கொல்கத்தாவில் பதற்றம் நிலவி வருகிறது. ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.