நிரவ் மோடியை நாடு கடத்த இங்கிலாந்திடம் கோரிக்கை: நாடாளுமன்றத்தில் வி.கே. சிங் தகவல்

0
0

நிரவ் மோடி இந்தியாவிடம் சரணடைவதற்கு ஏற்ப அவரை நாடு கடத்த வேண்டுமென்ற கோரிக்கையை இங்கிலாந்திடம் வைக்கப்பட்டுள்ளதாக வி.கே.சிங் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி செய்த வழக்கில் தப்பியோடிய வைர வியாபாரியை இந்தியாவிற்கு கொண்டுவருவது தொடர்பாக மக்களவையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ”இங்கிலாந்திலிருந்து நிரவ் மோடியை இந்தியாவிற்கு ஒப்படைக்க வேண்டுமென ஒரு ஒப்படைப்பு கோரிக்கை உள்துறை அமைச்சகத்திலிருந்து வெளியுறவு அமைச்சரகத்திற்கு வந்துள்ளது. இங்கிலாந்து அதிகாரிகளுக்கு இக்கோரிக்கையை முன்வைத்து ஒரு சிறப்பு ராஜதந்திரப் பணி கடிதம் மூலம் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் சட்டப் பிரிவின்கீழ் பிப்ரவரி 16, 2018 அன்று, நிரவ் மோடியின் பாஸ்போர்ட்டை அமைச்சகம் ரத்து செய்தது. இத்தகவல் சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலுக்கு அனுப்பிவைப்பதற்காக சிபிஐக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதேநேரம் நிரவ் மோடி பயணங்கள் குறித்து சரிபார்க்க எந்த வழிமுறையும் அமைச்சகத்திடம் இல்லை” என்று வி.கே.சிங் தெரிவித்தார்.

நிரவ் மோடியின் உறவினர் மெஹுல் சோக்ஸியின் கீதாஞ்சலி நிறுவனக் குழுமம் ஈடுபட்டுள்ள நிதி மோசடிகள் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகம் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. மே 24, மே 26 ஆகிய தேதிகளில் சோக்ஸி மற்றும் மோடிக்கு எதிராக புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டன.

நீதிமன்றம் குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்டு பிணையில் வெளிவரமுடியாத வாரண்ட் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அமலாக்கத்துறை இயக்குநரகம் மற்றும் சி.பி.ஐ. கோரிக்கையை ஏற்று ஜூலை 2 அன்று இன்டர்போல் நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் அறிவித்தது.

சிபிஐ ஊழல் மோசடி குறித்து தெரிவித்த சில வாரங்களுக்கு முன்பாகவே நிரவ் மோடி ஜனவரி முதல் வாரம் தனது குடும்பத்துடன் இந்தியாவை விட்டு வெளியேறினார். அமெரிக்க குடியுரிமை பெற்ற அவரது மனைவி ஆமி, ஜனவரி 6-ல் சென்றார். சோக்ஸி ஜனவரி 4-ல் சென்றார்.