நிரவ் மோடியை நாடு கடத்தக் கோரி இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை: மத்திய அரசு முறைப்படி அளித்தது

0
0

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி மோசடி செய்து லண்டனில் தலைமறைவாக இருக்கும் நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடுகடத்துவது தொடர்பாக இங்கிலாந்து அதிகாரிகளிடம் முறைப்படி இந்திய தூதரகம் கோரிக்கை மனு அளித்துள்ளது.

தங்கம் மற்றும் வைர வியாபாரியும், மிகப்பெரிய தொழிலதிபருமான நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலியாக கடன் உறுதியீட்டு பத்திரங்கள் தாக்கல் செய்து, ரூ.13 ஆயிரத்து 578 கோடி கடன் பெற்று மோசடி செய்தார் எனப் புகார் தெரிவிக்கப்பட்டது. வங்கிக்கடனை திருப்பிச் செலுத்தாமல் நிரவ் மோடி கடந்த ஜனவரி மாதம் லண்டனுக்கு தப்பிச் சென்றார்.

இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு செய்து நிரவ் மோடியின் வீடுகள், அலுவலகம், நகைக்கடைகள் ஆகியவற்றைச் சோதனை செய்து கோடிக்கணக்கான சொத்துக்களை முடக்கினார்கள்.

நிரவ் மோடி மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம், வங்கிக்கடன் மோசடி, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கப்பிரிவு, சிபிஐ, மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் ஆகியவை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லண்டனில் இருக்கும் நிரவ் மோடியை இந்தியாவுக்குக் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வந்தது. இதன் எதிரொலியாக இன்டர்போல், கடந்த ஜூலை மாதம் நிரவ் மோடிக்கு எதிராக ரெட் நோட்டீஸ் வெளியிட்டது. இதன் மூலம் 192 நாடுகளின் கண்காணிப்பில் நிரவ் மோடி வந்தார்.

இதற்கிடையே இந்தியா-இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே கடந்த 1993-ம் ஆண்டு செய்யப்பட்ட குற்றவாளிகளை நாடுகடத்தும் ஒப்பந்தத்தின்படி நிரவ் மோடியை நாடு கடத்தக் கோரி இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை வைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

ஏற்கனவே தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடுகடத்தும் வகையில் அவர் மீது லண்டன் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டு, அது முடியும் தருவாயில் இருக்கிறது.

இந்நிலையில் நிரவ் மோடியை இந்தியா அழைத்து வருவது தொடர்பான முறைப்படியான கோரிக்கையை இங்கிலாந்து அதிகாரிகளிடம் இந்தியத் தூதரக அதிகாரிகள் அளித்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

இது தொடர்பாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் பேசுகையில், பிஎன்பி வங்கியில் ரூ.13 ஆயிரத்து 578 கோடி கடன்பெற்று மோசடி செய்த நிரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்து வருவது தொடர்பாக லண்டன் வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு முறைப்படியான கோரிக்கை மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், கடந்த ஜூன் மாதம் இந்திய அதிகாரிகளுக்கு கிரவுன் விசாரணை சேவை மையத்திடம் இருந்து கிடைத்த தகவலின்படி, நிரவ் மோடி இங்கிலாந்தில் எங்கு இடத்தில் குறிப்பாக தங்கி இருக்கிறார் எனத் தெரியாத நிலையில், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் படி இங்கிலாந்துக்குக் கோரிக்கை விடுக்கலாம் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.