நிதிஷ் குமாருக்கு முடிவெடுக்கும் அதிகாரம்: ஐஜத செயற்குழு கூட்டத்தில் முடிவு

0
0

ஐக்கிய ஜனதா தளத்தின் அரசியல் விவகாரங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் நிதிஷ்குமாரிடம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 பிஹார் தேர்தலுக்குப் பிறகு ஐக்கிய ஜனதா தளமும், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளமும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் முதல்வராகவும் லாலுவின் மகன் தேஜஸ்வி பிரதாப் யாதவ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

கடந்த ஆண்டு ஜூலையில் நிதிஷ்குமார், லாலு கூட்டணி உடைந்தது. பாஜகவுடன் கைகோத்த நிதிஷ்குமார் புதிய கூட்டணி அரசை அமைத்தார். அவர் முதல்வராகவும் பாஜகவின் மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி துணை முதல்வராகவும் பதவி வகிக்கின்றனர். வரும் மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு விவகாரத்தில் இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தின் செயற்குழுக் கூட்டம் பாட்னாவில் நேற்று நடைபெற்றது. இதில் மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல் உட்பட அனைத்து அரசியல் விவகாரங்களிலும் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் நிதிஷ் குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கட்சியின் பொதுச்செயலாளர் சஞ்சய் குமார் ஜா நிருபர்களிடம் கூறியபோது, “மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளமும் பாஜகவும் இணைந்து போட்டியிடும். தொகுதிப் பங்கீடு குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்” என்றார்.

பாஜக தலைவர் அமித் ஷா வரும் 12-ம் தேதி பாட்னா செல்கிறார். அப்போது அவரும் நிதிஷ் குமாரும் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.