நாளை 2-வது டி20 போட்டி: தொடரை வெல்லும் துடிப்பில் கோலிப் படை- சுழற்பந்துவீச்சை சமாளிக்க இங்கிலாந்தின் உத்தி கைகொடுக்குமா?

0
0

 கார்டிப் நகரில் நாளை நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியிலும் வென்று, தொடரை கைப்பற்றும் முயற்சியில் கோலி தலைமையிலான இந்திய இளம்படை துடிப்புடன் உள்ளது.

அதேசமயம், இந்தியாவின் ரிஸ்ட் ஸ்பின்ர்களான குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல் ஆகியோரின் பந்துவீச்சை சமாளிக்க இங்கிலாந்து அணி பழைய உத்திகளை மீண்டும் கையிலெடுத்துள்ளது. இது கைகொடுக்குமா என்பது நாளைய போட்டியில்தான் தெரியும்.

கேஎல் ராகுலின் ஆர்ப்பரிப்பான சதம், குல்தீப்பின் மாயஜால சுழற்பந்துவீச்சால் முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்று முன்னணியில் இருக்கிறது. நாளை போட்டியில் வெல்லும் பட்சத்தில் தொடரைக் கைப்பற்றும் என்பதால், தீவிரமாக விளையாடக்கூடும்.

டி20 போட்டியில் தொடர்ந்து, 6-வதுமுறையாக டி20 தொடரை வெல்லும் முயற்சியில் இந்திய அணி இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து விளையாடப்படும் டி20 தொடர்களை இந்திய அணி வென்று வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது கோலிபடை. அதன்பின் இலங்கையில் முத்தரப்பு டி20தொடர், அயர்லாந்து தொடர் என வரிசையாக வென்றுள்ளது.

ஐசிசி டி20 தரவரிசையிலும் இந்திய அணியின் வெற்றி பல்வேறு மாற்றங்களை உருவாக்கக்கூடும். 2-0 என்று டி20தொடரை இந்திய அணி கைப்பற்றும் பட்சத்தில், ஆஸ்திரேலியாவின் 2-ம் இடத்தை தட்டிப்பறிக்கக்கூடும். அதேசமயம், 3-0 என்று இந்திய அணி தொடரை வென்றால், முதலிடத்தில் உள்ள பாகிஸ்தான் இடத்துக்கு முன்னேறக்கூடும்.

அதேசமயம், முத்தரப்பு டி20தொடரில் விளையாடிவரும் ஆஸ்திரேலியாவும், பாகிஸ்தானும் பெறும்வெற்றிகளும் தரவரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

இங்கிலாந்து அணி வீரர்கள்

 

இங்கிலாந்து அணி நாளை நடக்கும் போட்டியில் தோல்வி அடையும்பட்சத்தில், தரவரிசையில் 7-ம் இடத்துக்குச் சரியும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி டி20 தொடரில் திணறுவது வியப்பாக இருக்கிறது. இதுவரை கடைசியாக 10 டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணி 5 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.

நாளை நடக்கும் முக்கியப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு கிலிஏற்படுத்தும் விஷயமாக இருக்கப்போதுவது ரிஸ்ட் ஸ்பின்னர்கள் குல்தீப், யஜுவேந்திர சாஹலின் மாயஜால பந்துவீச்சாகும்.

முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பின், இங்கிலாந்து கேப்டன் எயின் மோர்கன், ஜோஸ்பட்லர் ஆகியோர் தங்களுடன் அணி வீரர்களுக்கு சுழற்பந்துவீச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று பாடம் நடத்தினார்கள். பந்துவீச்சாளர்கள் கையில் இருந்து பந்து எந்த முறையில் வெளியேறுகிறது என்பதைக் கணித்து ஆட வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

இதற்கிடையே இந்தியாவின் ரிஸ்ட் ஸ்பின்னர்களைச் சமாளிக்க மீண்டும் பழைய தொழில்நுட்பத்துக்கு இங்கிலாந்து அணி செல்ல உள்ளது. ஆஷஸ் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்ன் பந்துவீச்சைச் சமாளிக்க ஸ்பின் பவுலிங் மெஷினை பயன்படுத்தியது இங்கிலாந்து அணி.

அதே இயந்திரத்தை இப்போது இந்திய பந்துவீச்சாளர்களின் சுழற்பந்தை சமாளிக்கப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு ஆஷஸ் தொடருக்கு பின் மீண்டும் மெர்லின் இயந்திரத்தின் உதவியை இங்கிலாந்து நாடுகிறது இது எந்த அளவுக்குக் கைகொடுக்கும் என்பது நாளை தெரியும்.

இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பட்லர், ஜேஸன் ராய் வலுவாக இருக்கிறார்கள். ஆனால், நடுவரிசையில் பேர்ஸ்டோ, ஜோய் ரூட், மோர்கன் ஆகியோர் சுழற்பந்துவீச்சை கண்டு அஞ்சி கடந்த போட்டியில் விரைவாக வெளியேறியது பெரும் பின்னடைவாகும். இந்தப் போட்டியில் அவர்கள் நிலைத்து ஆடினால் இந்திய அணிக்குச் சிக்கலாகும்.

முதல் போட்டியில் சதம் அடித்த இந்திய வீர் கே.எல் ராகுல்

 

இந்திய அணியைப் பொருத்தவரை முதல் போட்டியில் ஷிகர் தவண் ஏமாற்றிவிட்டார். ஆனால், இந்த போட்டியில் நிலைத்து ஆடுவார் என்று நம்பலாம். ராகுல் அசுர ஃபார்மில் இருக்கிறார். விராட் கோலி, ரெய்னா, தோனி, ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா ஆகியோர் ஐபிஎல் போட்டியில் விளையாடி ஃபார்மில் இருப்பதால், பேட்டிங்கில் இந்திய அணி வலிமையாகவே இருக்கிறது.

பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் ஓவரை கடந்த போட்டியில் அடித்துத் துவைத்துவிட்டனர், ஆனால், உமேஷ்யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி நம்பிக்கை ஏற்படுத்திவிட்டார். இந்திய அணியில் பெரும்பாலும் வீரர்கள் தேர்வில் எந்தவிதமான மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை.

அதிலும் கார்டிப் ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கும், பந்துவீச்சுக்கும் ஓரளவு ஒத்துழைக்கும் ஆடுகளம் என்பதால், ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். ஆனால், கார்டிபில் மழைவருவதற்கான சாத்தியங்கள் இருப்பதால், நாளை போட்டியில் மழை இடையூறு ஏற்பட வாயப்பு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.