நாமக்கல்லில் பணம் கேட்டு மிரட்டிய போலி பெண் போலீஸ் எஸ்ஐ கைது

0
0

நாமக்கல் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டிய போலி பெண் எஸ்ஐ ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டம் மோகனூர் நவலடியான் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சக்திவேல். அவரது மனைவி விமலாதேவி(40). கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவரது மகளுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளார். இந்நிலையில் அவரது மகள், வேறொரு நபருடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளார். இதுதொடர்பாக மோகனூர் காவல் நிலையத்தில் விமலாதேவி புகார் செய்துள்ளார். போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கூலி வேலைக்குச் சென்று வந்த விமலாதேவி, அதிக பணம் சம்பாதிக்க சிலரின் ஆலோசனையின்பேரில் போலீஸ் வேடம்போட்டுள்ளார். போலீஸ் எஸ்ஐ உடையணிந்து மிரட்டி பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார். எனினும், மோகனூரில் இருந்தால் சிக்கிவிடுவோம் என அச்சமடைந்து நாமக்கல் அருகே அலங்காநத்தத்தில் கைவரிசை காட்டியுள்ளார்.

நேற்று முன்தினம் மாலையில் எஸ்.ஐ. சீருடையில் மருந்துக் கடைக்கு சென்ற விமலாதேவி, கடையில் ஊசி போடுவதாக புகார் வந்துள்ளதாகவும், பணம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் கூறியுள்ளார். அச்சமடைந்த கடைக்காரர் பணம் கொடுத்துள்ளார். மிரட்டியவுடன் பணம் கிடைத்ததால், அருகே உள்ள அலங்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று, முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என புகார் வந்துள்ளதாக அங்கிருந்து மருத்துவர்கள், ஊழியர்களிடம் கூறியுள்ளார். மேலும் பணம் கொடுத்தால் கண்டுகொள்ளாமல் விடுவதாக கூறியுள்ளார்.

சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள், எருமப்பட்டி போலீஸாருக்கு உடனடியாகத் தகவல் அளித்தனர். இதன்பேரில் போலீஸார் விரைந்து வந்து விமலாதேவியை பிடித்து விசாரித்ததில், போலீஸ் வேடமணிந்து பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இவ்வாறு போலீஸார் கூறினர்.

மகளை தேடி வேடமிட்டாரா?

இதனிடையே, காணாமல் போன மகளை தேடி கண்டுபிடிப்பதற்காக விமலாதேவி, போலீஸ் வேடமிட்டு தேடியதாக தகவல் வெளியானது. ஆனால், போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்கவே இவ்வாறு விமலாதேவி கூறியதாகவும், பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு போலீஸ் வேடமிட்டதாகவும் போலீஸார் கூறினர்.