”நான் கேரள அரசின் மகள்”- பினராயி விஜயனை சந்தித்த பிறகு மீன் விற்கும் மாணவி ஹனன் நெகிழ்ச்சிப் பேட்டி

0
0

கேரளாவில் கல்லூரியில் படித்துக்கொண்டே மீன் விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வரும் மாணவி ஹனன் கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தார்.

எர்ணாகுளம் அருகே தொடுபுழாவைச் சேர்ந்த இளம் பெண் ஹனன் (19 வயது). இவர் தொடுபுழாவில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

கல்லூரிக்குச் சென்ற நேரம் போக மாலை நேரங்களில் தம்மணம் பகுதியில் மீன் விற்பனை செய்து தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

இந்த மீன் விற்பனையின் மூலம்தான் ஹனன் தனது படிப்பையும், தனது குடும்பத்தையும் கவனித்து வருகிறார். ஹனன் குறித்து கடந்த வாரம் மாத்ருபூமி நாளேட்டில் சிறப்புக் கட்டுரை வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் மலையாள திரை நட்சத்திரங்களும் அவரைப் பாராட்டி, உதவி செய்ய முன்வருவதாகத் தெரிவித்தனர்.

ஆனால், சமூக ஊடகங்களில் ஒரு சிலர் கல்லூரி மாணவி ஹனனின் நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்தனர். அவரின் செயல்பாடுகள் மீது சந்தேகம் எழுப்பிய நெட்டிசன்கள் ஹனனின் நடவடிக்கை போலியானது, செய்தியும் போலியானது என்று கூறி கடுமையாக விமர்சித்தனர். இது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பாக உருவெடுத்தது.

ஆனால், ஹனனின் கல்லூரி முதல்வர், தோழிகள், உறவினர்கள் அனைவரும் மாத்ரூபூமி நாளேட்டில் வந்த செய்தி உண்மையானதுதான். அவர் உண்மையில் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர், அவரின் பொருளாதார நிலையால் மாலை நேரத்தில் மீன் விற்கிறார். அந்தச் செய்தி போலியானது அல்ல என்று ஆதரவு தெரிவித்தனர்.

இருந்தாலும், நெட்டிசன்கள் தொடர்ந்து ஹனனைப் புண்படுத்தும் வகையில் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.

மீன் விற்பனை செய்த ஹனன்

 

இது குறித்து அறிந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் ஃபேஸ்புக்கில் ஹனனுக்கு ஆதரவு அளித்து கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். கேரள முதல்வர் பினராயி விஜயனும் ஆதரவு தெரிவித்து, ஹனனுக்கு கேரள அரசு துணையிருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து நன்றி தெரிவிக்க இன்று, மாணவி ஹனன் தலைமைச் செயலகம் வந்திருந்தார். அப்போது அமைச்சரவைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. இதனால் சிறிது நேரம் அவர் காத்திருந்தார். அதன்பின் கூட்டம் முடிந்தபின் முதல்வர் பினராயி விஜயன் ஹனனைச் சந்தித்தார்.

முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்ததும் ஹனின் மகிழ்ச்சியோடு புன்னகை செய்து, தனக்கு ஆதரவு தெரிவித்தமைக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்தார்.

அப்போது முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ”ஹனனுக்குத் தேவையான அனைத்து வகையான ஆதரவையும் நான் அளிப்பேன். துணிச்சலுடன் தனது படிப்பையும், தொழிலையும் தொடரலாம். ஹனனுக்கு தேவையான அனைத்து பாதுகாப்புகளையும் தரக்கூறி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.

அதன்பின் முதல்வர் பினராயி விஜயனுடன் சேர்ந்து ஹனன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதையடுத்து ஹனன் நிருபர்களிடம் கூறுகையில், ”ஒரு மகள் எப்போதும் தனது பெற்றோர்களிடம் இருந்து பாதுகாப்பு ஒன்றை மட்டுமே எதிர்பார்ப்பார். அதை முதல்வர் பினராயி விஜயன் எனக்கு ஒரு தந்தையைப் போல் ஆதரவையும், பாதுகாப்பையும் அளிப்பதாக உறுதியளித்தார். நான் கேரள அரசின் மகள்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.