நாட்டிலேயே தமிழகம் 4-வது இடம்; கடந்த ஓராண்டில் ஜிஎஸ்டி வரி ரூ.2.26 லட்சம் கோடி வசூல்: முதன்மை தலைமை ஆணையர் சி.பி.ராவ் பெருமிதம்

0
0

ஜிஎஸ்டியில் புதிதாக பதிவு செய்வோர் எண்ணிக்கை மற்றும் வருவாயில் நாட்டில் 4-வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. தமிழக மண்டலத்தில் கடந்த ஓராண்டில் ஜிஎஸ்டி வரி ரொக்கம் மற்றும் உள்ளீட்டு வரியாக ரூ.2.26 லட்சம் கோடி கிடைத்துள்ளது என்று ஜிஎஸ்டி முதன்மை தலைமை ஆணையர் சி.பி.ராவ் தெரிவித்தார்.

நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கடந்த 2017 ஜூலை1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது.

ஜிஎஸ்டி வாரம்

கடந்த 1-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதையொட்டி, 1-ம் தேதி முதல் நேற்று வரை ‘ஜிஎஸ்டி வாரம்’ கொண்டாடப்பட்டது. ஜிஎஸ்டி அமலாக்கத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதன்மை தலைமை ஆணையர் சி.பி.ராவ், முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நிலையில், வரி செலுத்தும் நடைமுறையில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. வரி செலுத்தும் தன்மையும் சிறிது சிறிதாக மாறியுள்ளது. கடந்த 5-ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் மொத்த எண்ணிக்கை 9,89,497. இதில், பழைய வரி விதிப்பு முறையில் இருந்து ஜிஎஸ்டிக்கு மாறியவர்களை பொறுத்தவரை மத்திய அரசுக்கு வரிசெலுத்தியவர்கள் 97,037 பேர், மாநில அரசுக்கு வரிசெலுத்தியவர்கள் 5,10,763 பேர்.

மத்திய ஜிஎஸ்டியில் 1,87,150 பேர், மாநில ஜிஎஸ்டியில் 1,85,547 பேர் புதிதாக பதிவு செய்த வர்கள்.

வரி வருவாயைப் பொறுத்தவரை, மத்திய ஜிஎஸ்டி வரி ரொக்கமாக ரூ.24,745 கோடியும், உள்ளீட்டு வரியாக ரூ.84,091 கோடியும் கிடைத்துள்ளது.

மாநில ஜிஎஸ்டியை பொறுத்தவரை ரொக்கமாக ரூ.26,022 கோடியும், உள்ளீட்டு வரியாக ரூ.91,052 கோடியும் வரி வருவாய் கிடைத்துள்ளது. தமிழக மண்டலத்தில் ரொக்கமாக ரூ.50,972 கோடியும், உள்ளீட்டு வரியாக ரூ.1,75,953 கோடியும் கிடைத்துள்ளது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ரூ.9,458 கோடி ரொக்க வருவாய் கிடைத்துள்ளது.

ஏற்றுமதி தொடர்பாக செலுத்திய தொகையை திரும்பப் பெற 5,157 விண்ணப்பங்கள் வந்தன. இதில், கடந்த 2-ம் தேதி வரை ரூ.2,620 கோடி திருப்பித் தரப்பட்டுள்ளது. ரூ.300 கோடி நிலுவை உள்ளது.

இதற்கிடையில், செலுத்திய பணத்தை திருப்பி அளிப்பது தொடர்பாக கடந்த மார்ச், மே மாதங்களில் நடத்தப்பட்ட முகாம்களில் ரூ.1,161 கோடி திருப்பித் தரப்பட்டுள்ளது. அதேபோல, ஏற்றுமதிக்கான ஜிஎஸ்டி வகையில் ரூ.2,085 கோடி திருப்பித் தரப்பட்டுள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 260 ஜிஎஸ்டி கேந்திராக்கள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 32,706 கோரிக்கைகள் பெறப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. தேசிய அளவில் பதிவு மற்றும் வருவாயில் தமிழகம் 4-ம் இடத்தில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை தெற்கு ஜிஎஸ்டி ஆணையர் ரவிச்சந்திரன் கூறும்போது, ‘‘ஜிஎஸ்டி வரி செலுத்த பதிவு செய்தவர்கள், வரி செலுத்த அவசியம் இல்லாவிட்டாலும், கணக்கு காட்ட வேண்டும். 4 ஆண்டுகள் தொடர்ந்து கணக்குகளை காட்டாமல் இருந்து 5-வது ஆண்டு கணக்கு காட்டி, வரி செலுத்தினால் அபராதம் செலுத்த வேண்டிவரும்’’ என்றார்.