நாட்டின் அனைத்து மாவட்டத்திலும் ஷரீயத் நீதிமன்றம்: அகில இந்திய முஸ்லீம் தனிச்சட்ட வாரியம் முடிவு

0
0

நாட்டின் அனைத்து மாநிலங்களின் மாவட்டங்கள்தோறும் இஸ்லாமியர்களின் ‘தாரூல் கஜா’ எனப்படும் ஷரீயத் நீதிமன்றங்களை அமைக்க அகில இந்திய முஸ்லீம் தனிச்சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது. இதன் மீது ஜூலை 15-ல் நடைபெறவிருக்கும் அதன் நிர்வாகக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

இந்திய முஸ்லீம்கள் பலரும் தங்கள் குடும்பப் பிரச்சினைகளை தங்கள் பகுதியிலுள்ள மசூதிகளின் ஜமாத்துகளில் புகார் அளித்து தீர்த்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இஸ்லாமியர்களின் ஷரீயத் சட்டத்தின் கீழ் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டியது அந்த ஜமாத்துக்களின் கடமையாக உள்ளது. ஆனால், சில ஜமாத்துக்கள், கிராமப்புறப் பஞ்சாயத்துக்களை போல் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதாகப் புகார் உள்ளது. இதனால், ஜமாத்துக்களில் முடியாத பிரச்சினைகள் காவல்நிலையங்களில் புகாராகவும் நீதிமன்றங்களில் வழக்காகவும் தாக்கல் செய்யப்படுகின்றன. இவற்றில் பல புகார்கள் சமீப காலமாக சர்ச்சைக்குள்ளாகி தங்கள் மதம் விவாதத்திற்கு உள்ளாவதாக இஸ்லாமியர்கள் கருதுகின்றனர். இதைத் தவிர்க்க நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களின் மாவட்டங்கள்தோறும் ஒரு ஷரீயத் நீதிமன்றம் அமைக்க முஸ்லீம் தனிச்சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் முஸ்லீம் தனிச்சட்ட வாரியத்தின் செய்தி தொடர்பாளரான ஜபர்யாப் ஜிலானி கூறும்போது, ‘‘தங்களுக்கு இடையிலான பிரச்சினைக்களுக்காக முஸ்லீம்கள் நீதிமன்றம் செல்வதை தவிர்த்து தங்கள் ‘தாரூல் கஜா’வில் (ஷரீயத் நீதிமன்றம்) பிரச்சினையை முடித்துக் கொள்வது நல்லது. தாரூல் கஜாவின் குறைந்தபட்ச மாத செலவு ரூ.50,000 மட்டுமே. நிர்வாகக்குழு உத்தரவின் பேரில் எங்கள் தஹபூஸ் எ ஷரீயத் கமிட்டி அவற்றை அமைக்கும் பணியை துவங்கும்’’ எனத் தெரிவித்தார்.

உ.பி.யில் அதிக எண்ணிக்கையில் உள்ள முஸ்லீம்கள் சுமார் 40 ஷரீயத் நீதிமன்றங்களை அமைத்து தம் வழக்குகளை தீர்த்துக் கொள்கின்றனர். இவற்றில் பெரும்பாலான வழக்குகள் நல்ல முறையில் தீர்த்து வைப்பதாகக் கருதப்படுகிறது. மத்தியில் தலைமை ஏற்று ஆளும் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி அனைத்து மதத்தினருக்குமான பொது சிவில் சட்டம் கொண்டுவரும் முயற்சியில் இறங்கி உள்ளது.

முத்தலாக் முறையை ஒழிக்க மக்களவையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்ட மசோதா, அதன் ஒரு முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. எனவே, ஷரீயத் நீதிமன்றங்கள் அமைக்க முஸ்லீம் சட்ட வாரியம் விரும்புகிறது. இதுபற்றி வரும் 15-ம் தேதி உ.பி. தலைநகர்லக்னோவில் கூடவிருக்கும் முஸ்லீம் தனிச்சட்ட வாரியத்தின் நிர்வாகக் குழு ஆலோசிக்க உள்ளது.