நாட்டின் அதிவேக பொருளாதார வளர்ச்சிக்கு புதிய கண்டுபிடிப்புகள் மிகவும் அவசியம்: பிரதமர் நரேந்திர மோடி கருத்து

0
0

நாட்டின் அதிவேக பொருளாதார வளர்ச்சிக்கு புதிய கண்டுபிடிப்புகள் மிகவும் அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மும்பை ஐஐடி-யின் 56-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது:

புதிய கண்டுபிடிப்புகளே 21-ம் நூற்றாண்டின் தாரக மந்திரம். மிகச் சிறந்த சிந்தனைகள், ஆலோசனைகள் அரசு அலுவலகங்களிலோ, இதர அலுவலகங்களிலோ பிறக்கவில்லை. ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் இளைய தலைமுறையினரிடம் இருந்துதான் மிகச் சிறந்த சிந்தனைகள் உருவாகின்றன. பல்வேறு தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஐஐடி மாணவர்கள் உதவுகின்றனர். அவர்களின் சாதனைகளால் நமது நாடு பெருமிதம் கொள்கிறது.

இந்தியாவின் வளர்ச்சிக்காக வும் மனிதகுல முன்னேற்றத்துக் காகவும் புதிய தொழில்நுட்பங் களை ஐஐடி மாணவ, மாணவி யர் கண்டுபிடிக்க வேண்டும். நாட்டின் அதிவேக பொருளா தார வளர்ச்சிக்கு புதிய கண்டுபி டிப்புகள் அவசியம். புதிய கண்டுபிடிப்புகள் இல்லாத சமுதாயம் தேக்கமடையும்.

இந்தியா தொழில்நுட்பத்தில் வேகமாக முன்னேறி வருகிறது. 5ஜி பிராண்ட்பேண்ட், செயற்கை நுண்ணறிவு, இயந்திரவியல் உள்ளிட்ட துறைகளில் இந்தியா குறிப்பிடத்தகுந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது. ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் மையமாக இந்தியா உருவாகி வருகிறது.

மும்பை ஐஐடி-யின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக மத்திய அரசு ரூ.1,000 கோடியை வழங்கும். இன்ஜினீயரிங் மாணவர்களின் தொழில்நுட்பத் திறன் மேம்பட்டதாக இருக்க வேண்டும். அதற்கு அவர்களுக்கு உயர்தர கல்வி அளிக்கப்பட வேண்டும்.

நாட்டின் சுதந்திரத்துக்காக நமது முன்னோர்கள் உயிரை தியாகம் செய்தனர். அவர்களின் வழித்தோன்றல்களான நாம் புதிய இந்தியாவை உருவாக்க உறுதியேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.