‘நாங்கள் ஜனநாயகத்தைக் காப்பதால்தான் டீ விற்பனையாளர் கூட பிரதமராக முடிகிறது’: மல்லிகார்ஜுன கார்கே காட்டம்

0
0

காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தைப் பாதுகாத்து வருவதால்தான், மோடி போன்ற டீ விற்பனையாளர் கூட நாட்டில் பிரதமராக வர முடிகிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மும்பையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

பிரதமர் மோடி ஒவ்வொரு கூட்டத்திலும், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு என்ன செய்தது என்று கேட்டு வருகிறார். நான் சொல்கிறேன், காங்கிரஸ் கட்சி நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாத்துவந்ததால்தான், ஒரு சாதாரண டீ விற்பனையாளரான மோடி, நாட்டின் பிரதமராக முடிந்தது.

காங்கிரஸின் மறைந்த தலைவர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோரின் குணங்களை கடுமையாக பாஜகவும், மோடியும் விமர்சிக்கிறார்கள். காங்கிரஸ் என்பது ஒரு குடும்பம், அதில் நாங்கள் எல்லாம் உறுப்பினர்கள்.

43 ஆண்டுகளுக்கு முந்தைய எமர்ஜென்சி குறித்து மோடி பேசுகிறார். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவுகிறே அதை என்ன சொல்வது. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள், விவசாயத் திட்டங்கள் எல்லாம் தோல்வி அடைந்து வருகின்றன. விவசாயிகள் புதிய கடன்களை வங்கிகளில் பெற முடிவதில்லை, நாட்டின் வர்த்தம் மந்தமாகச் செல்கிறது.

மறுபுறம் மத்திய அரசு தன்னுடைய திட்டங்கள் குறித்து செய்யும் விளம்பரங்களைத் தடுத்து நிறுத்தமுடியவில்லை. நல்லகாலம் என்பது சுவரொட்டியிலும், விளம்பரத்திலும் வருவதில்லை, மக்களின் வாழ்க்கையில் வர வேண்டும். மோடி அரசு அகற்றப்படும் போது, மக்களுக்கு நல்ல காலம் வரும்.

வாருங்கள் அனைவரும் இணைந்து பணியாற்றினால், போராடினால், நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறலாம். மஹாராஷ்டிரா மாநிலத்தில் வெல்லும் கட்சியைப் பொருத்தே மத்தியில் ஆட்சி அமையும்.

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.