நாக்பூர் அருகே ஏரியில் மூழ்கி மூவர் உயிரிழப்பு: சோகத்தில் முடிந்த நட்பு தினக் கொண்டாட்டம்

0
0

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே, நட்பு தினத்தைக் கொண்டாடச் சென்ற 8 டீன் ஏஜ் நண்பர்களில் மூன்று பேர் ஏரியில் மூழ்கி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து ஹிங்னா காவல் நிலைய ஆய்வாளர் மேரேஷ்வர் பாராபத்ரி கூறுகையில், ”நேற்று நட்பு தினம் (ஆகஸ்ட் 5) உலகெங்கிலும் கொண்டாடப்பட்டது. நட்பு தினம் கொண்டாட எட்டு பேர் கொண்ட டீன்ஏஜ் நண்பர்கள் குழுவினர் நாக்பூர் மாவட்டத்தின் ஹிங்னா பகுதியில் உள்ள சாலாய் மெந்தா ஏரியில் குளித்து மகிழ்ந்தனர். ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்டநேரம் நிலைக்கவில்லை.  ஏரியின் ஆழமான பகுதிக்குச் சென்ற மூவர் நீரில் மூழ்கினர்.

அந்த நண்பர்கள் குழுவில் மீதியுள்ளவர்கள் உடனே போலீஸுக்குத் தகவல் தந்தனர். விரைந்து வந்த போலீஸார் நீரில் மூழ்கியவர்களை மீட்க முயன்றனர். எனினும் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. நீண்ட நேரம் கழித்து அவர்களது உடல்கள் வெளியே வந்து நீரில் மிதக்கத் தொடங்கின.

உயிரிழந்தவர்கள் குறித்து தற்செயலான மரணம் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது”என்று காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.