நாகூர் தர்கா பெயரில் ரூ.5, 10 நாணயங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்: அதிமுக எம்பிக்கள் கோரிக்கை

0
1

நாகூர் தர்கா பெயரில் ரூ.5 மற்றும் ரூ.10 மதிப்பிலான நாணயங்களை வெளியிட மத்திய அமைச்சர்களிடம் நாடாளு மன்றத்தின் அதிமுக எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பான கோரிக்கை மனுவை அதிமுக சார்பில் எம்.பி. அன்வர் ராஜா இரு மத்திய அமைச்சர்களிடம் வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அமைந்துள்ளது புகழ் பெற்ற நாகூர் தர்கா. இஸ்லா மியர்களின் புனிதத் தலமான இது ஹசரத் சையத் அப்துல் காதிர் ஷாகுல் ஹமீது என்பவரின் நினைவாக உருவானது. வங்காள விரிகுடாக் கடலின் கரையில் அமைந்துள்ள இந்த தர்கா அடுத்த வருடம் 450 வருடங்களை நிறைவு செய்ய உள்ளது.

இதையொட்டி நாகூர் தர்கா வின் நினைவாக ரூ.5 மற்றும் ரூ.10 நாணயங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என அதிமுக எம்பிக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதற்காக அதிமுகவின் நாடாளுமன்ற இருஅவைகளின் எம்பிக்கள் கையொப்பம் இட்ட மனுவை மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, மத்திய நிதி அமைச்சர்(பொறுப்பு) பியூஷ் கோயல் ஆகியோரிடம் அதிமுக எம்பியான அன்வர் ராஜா நேரில் அளித்தார்.

இந்த மனுவில், ’அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் வந்து செல்லும் இடமாக நாகூர் தர்கா உள்ளது. இதில் வருடந்தோறும் நடைபெறும் 14 நாள் கந்தூரி திருவிழாவுக்கு தமிழக அரசும் பல உதவிகளை செய்கிறது. இதன் 450 ஆவது நிறைவு விழா அடுத்த வருடம் பிப்ரவரியில் வருகிறது.

அப்போது சிறந்த ஞானியான நாகூர் ஆண்டவரான ஹசரத் சையது காதிர் நினைவாக ரூ.5, ரூ.10 நாணயங்களை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோரிக்கை மனுவைப் பெற்ற மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வீ, இதுதொடர்பாக ஆவன செய்வதாக அன்வர் ராஜாவிடம் உறுதி அளித்துள் ளார். இந்த மனுவின் நகல் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிக்கும் அனுப்பப்பட் டுள்ளது.