நவாஸ் ஷெரீபை கைது செய்ய ஏற்பாடுகள் தயார்: லாகூரில் பலத்த பாதுகாப்பு

0
0

ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோர் இன்று மாலை லாகூர் திரும்புகின்றனர். அவர்களை விமான நிலையத்தில் கைது செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதனால் பாகிஸ்தானில் பரபரப்பு நிலவி வருகிறது.

பனாமா பேப்பர்ஸ் ஊழல் என்பது, பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட ஆலோசனை நிறுவனமான மொசாக் பொன்சேகாவின் ஆலோசனையின் பெயரில் உலகில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் விஐபிக்கள் தங்கள் நாட்டில் வரிஏய்ப்பு செய்து, ஊழல் செய்து, முறைகேடாகச் சேர்த்த சொத்துகளைப் போலி நிறுவனங்களில் முதலீடு செய்தனர். அந்த முதலீட்டுக்கும், சட்ட ஆலோசனைக்கும் மொசாக் பொன்சேகா நிறுவனம் உதவியது.

இந்த விஷயத்தைச் சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு கடந்த 2016-ம் ஆண்டு மே 16-ம் தேதி அம்பலப்படுத்தியது. இதில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் முறைகேடாக தங்கள் நாட்டில் சம்பாதித்த சொத்துகள் அனைத்தையும், லண்டனில் முடக்கியுள்ளார். லண்டனில் அவென்பீல்ட் ஹவுஸிங் என்ற அடுக்குமாடி வீடும், சொத்துகளும் வாங்கியுள்ளார் என வெளிப்படுத்தியது.

இந்த விவகாரம் வெளியே அம்பலமாகும்போது, பாகிஸ்தானில் பிரதமராக நவாஸ் ஷெரீப் இருந்தார். இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமராக நவாஷ் ஷெரீப் தடைவிதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் அவரைப் பதவி நீக்கம் செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. கடந்த ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீப் விலகினார். இதைத் தொடர்ந்து லண்டனில் அவென்பீலட் அடுக்குமாடி வீடுகள் வாங்கியது தொடர்பான வழக்கு விசாரணை நடந்தது.

நவாஸ் ஷெரீப்பின் மனைவி குல்சும் நவாஸ் புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதால், லண்டனில் அனைவரும் தங்கி இருந்தனர். இந்த வழக்கின் விசாரணைக்காக அவ்வப்போது நவாஸ் ஷெரீப்பும், அவரின் மகள் மரியமும் லண்டனில் இருந்து ஆஜராகினார்கள்.

இந்த வழக்கின் தீர்ப்பு 4 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அண்மையில் தீர்ப்பளிக்கப்பட்டது. பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ரூ.74 கோடி(80 லட்சம் பவுண்ட்) அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், நவாஸ் மகள் மரியம், மருமகன் சப்தார், இவர்களின் மகன்கள் ஹசன், ஹூசைன் ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இதில் நவாஸ் மகள் மரியத்துக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், 2 மில்லியன் பவுண்ட் அபராதமும் விதிக்கப்பட்டது.

வரும் 25-ம் தேதி பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இந்தத் தீர்ப்பினால், மகள் மரியம், மருமகன் சப்தார் ஆகியோர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நவாஸ் ஷெரீப் இன்று பாகிஸ்தான் திரும்புவதாக தகவல் வெளியானது. அபுதாபி வழியாக லாகூர் வர அவர் திட்டமிட்டு இருந்தார்.  இதனிடையே அபுதாபி சென்ற பாகிஸ்தான் புலனாய்வு துறை அதிகாரிகள் அவரை காவல்கள் புடைசூழ அழைத்து வருகின்றனர். அபுதாபியில் இருந்து விமானத்தில் அவர் லாகூர் அழைத்து வரப்படுகிறார். லாகூர் விமான நிலையத்தில் அவரை முறைப்படி கைது செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து லாகூர் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வருகின்றனர். லாகூர் முழுவதும் 10,0000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது. லாகூர் விமான நிலையத்தில் கைது செய்யப்படும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் இஸ்லாமாபாத் அழைத்துச் செல்லப்பட்டு ராவல்பின்டி சிறையில் அடைக்கப்படுவார் எனத் தெரிகிறது.