நள்ளிரவு போலிஸாரின் வாகன சோதனையின் போது அடையாறு ஆற்றில் குதித்த நபர்

0
1

சென்னையில் நேற்று நள்ளிரவு அடையாறு மேம்பாலம் அருகே போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வமயத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்களைப் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ராதாகிருஷ்ணன் என்ற நபரையும் நிறுத்தி சோதனை செய்தனர், அப்போது அவர் மது அருந்தியிருந்தது தெரிய வந்தது. இதனால் வழக்கமாகச் செய்வது போல் அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.

இதனால் கடும் பதற்றமடைந்த அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதாவது அபராதம் மட்டும் விதியுங்கள், வாகனத்தைப் பறிமுதல் செய்ய வேண்டாம் என்று கேட்டுள்ளார்.

வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும் போதே ராதாகிருஷ்ணன் திடீரென ஓடிச்சென்று அடையாறு ஆற்றில் குதித்துவிட்டார், இதனால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே மயிலை தீயணைப்புப் படையினருக்குத் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து அடையாற்றில் தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டது. ஆனால் இருட்டாக இருந்ததால் தேடுதல் பணியில் கடும் சிரமம் ஏற்பட்டது.

அடையாற்றில் குறைந்த அளவே தண்ணீர் செல்வதால் அவர் வேறொரு கரையில் ஏறி ராதாகிருஷ்ணன் சென்று விட்டாரா அல்லது ஆற்றில் சிக்கியுள்ளாரா? என்று தெரியவில்லை. இன்று காலையும் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர், ஆனால் ராதாகிருஷ்ணன் பற்றி தகவல் இல்லை.