நயன்தாரா படத்தில் மீண்டும் யோகிபாபு – இந்து தமிழ் திசை

0
0

கே.எம்.சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படத்தில், யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

‘எச்சரிக்கை: இது மனிதர்கள் நடமாடும் இடம்’ என்ற படத்தை இயக்கிய கே.எம்.சர்ஜுன், அடுத்ததாக நயன்தாராவை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். ஹீரோயினை மையமாகக் கொண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. ‘அறம்’ படத்தைத் தயாரித்த கோட்டபாடி ராஜேஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்த நிலையில், இரண்டாவது ஷெட்யூலுக்காகத் திகிலூட்டும் பேய் பங்களா செட் சென்னையில் தயாராகி வருகிறது. அங்கு படப்பிடிப்பு முடிந்ததும், அடுத்த ஷெட்யூலுக்காக பொள்ளாச்சி செல்கிறது படக்குழு. கலையரசன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், தற்போது யோகிபாபுவும் இணைந்திருக்கிறார்.

யோகிபாபுவுடன் ஏற்கெனவே ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நடித்துள்ளார் நயன். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில், நயனிடம் யோகிபாபு லவ் புரப்போஸ் செய்யும் ‘எனக்கு இப்போ கல்யாண வயசு வந்துடுச்சிடி’ பாடல் ஹிட்டாகியுள்ளது. சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இந்தப் பாடலுக்கு, அனிருத் இசையமைத்துள்ளார்.

‘கோலமாவு கோகிலா’ படத்தில் யோகிபாபுவின் நடிப்பு பிடித்துப் போனதால், நயன்தாராவே கே.எம்.சர்ஜுனிடம் சிபாரிசு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. அஜித் ஜோடியாக நயன் நடிக்கும் ‘விசுவாசம்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் யோகிபாபு.