நன்றாகத் தொடங்கிய இந்திய அணிக்கு ‘செக்’ வைத்த சாம் கரன்

0
0

பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்ட உணவு இடைவேளையின் போது இந்திய அணி நன்றாகத் தொடங்கி பிறகு 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 76 ரன்களை எடுத்துள்ளது.

உணவு இடைவேளையின் போது கேப்டன் விராட் கோலி 9 ரன்களுடனும், ரஹானே 8 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.

முன்னதாக மொகமது ஷமி கடைசி விக்கெட்டை வீழ்த்த இங்கிலாந்து 287 ரன்களுக்குச் சுருண்டது.

இந்நிலையில் இந்திய அணி தன் இன்னிங்சைத் தொடங்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் ஆண்டர்சன், பிராட் ஜோடி பந்துவீச்சு எதிர்பார்த்த தாக்கம் ஏற்படுத்தவில்லை.

ஒரு முறை முரளி விஜய் ரன் அவுட் ஆகியிருப்பார், அருகிலிருந்தும் பந்தை ஸ்டம்பில் அடிக்க முடியவில்லை, ஷிகர் தவன் ஒரு பந்தை தடுத்தாட பந்து உருண்டு ஸ்டம்பை நோக்கிச் சென்றது ஆனால் ஷிகர் தவண் சுதாரித்துப் பிழைத்தார், ஆண்டர்சன் பந்து ஒன்று உள்ளே வர கால்காப்பில் வாங்கினார் விஜய், நாட் அவுட்டை ஜோ ரூட் ரிவியூ செய்து விரயம் செய்தார், பந்து தெளிவாக லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்றது.

இவற்றை மீறி முரளி விஜய் ஒரு அருமையான நேர் டிரைவிலும் அதைவிடவும் அருமையாக ஒரு ஸ்கொயர் ட்ரைவிலும் 2 பவுண்டரிகள் அடித்தார்.

ஷிகர் தவண் பிராடை மிக அருமையாக ஒரு டச் கவர் ட்ரைவ் பவுண்டரியும் ஆண்டர்சனை அருமையாக பிளிக் ஆடி மிட்விக்கெட்டிலும் பவுண்டரி அடித்து அரைசதக் கூட்டணி அமைத்தனர்.

சாம் கரன். | படம்.| ஏ.பி.

 

அதன் பிறகு 14வது ஓவரை இடது கை வேகப்பந்து வீச்சாளர் சாம் கரன் வீச 3வது பந்து பெரிய இன்ஸ்விங் ஆகி உள்ளே வர விஜய்யின் தலை ஆஃப் திசையில் விழுந்தது பந்து நேராகக் கால்காப்பைத் தாக்கியது, நடுவர் இதனை ஏன் நாட் அவுட் என்றார் என்று புரியவில்லை, ரூட் ரிவியூ செய்தார், இம்முறை நடுவர் தீர்ப்பு மாற்றியமைக்கப்பட்டு விஜய் 20 ரன்களுக்கு நன்றாக ஆடி வெளியேறினார்.

இதே ஓவரில் கே.எல்.ராகுல் இறங்கியவுடன் எட்ஜ் பவுண்டரி ஒன்றை அடித்தார், அப்பொதாவது சுதாரித்திருக்க வேண்டும், முதல் முறையாக இங்கிலாந்தில் ஆடும் போது பொறுமை அவசியம் என்பதை உணராது சாம் கரன் வீசி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ராகுல் மட்டையிலிருந்து ஒரு மீட்டர் தள்ளிச் சென்ற பந்தை ஆட முயன்று பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனது. 4-ல் வெளியேறினார் ராகுல்.

மீண்டும் கரன் ஓவரில் ஷிகர் தவண், உள்ளே வந்து வெளியே சென்ற ஸ்விங் பந்தை லெக் திசையில் பிளிக் ஆட முயன்றார், எட்ஜ் ஆகி 3வது ஸ்லிப்பைக் கடந்து பவுண்டரி சென்றது. அடுத்த பந்து மீண்டும் அதே லெந்தில் பீட் ஆனார் தவண், இப்போதும் தவண் ஆபத்தை உணரவில்லை, முதலில் அருமையாக கட்டுக்கோப்பான தடுப்பாட்டம் ஆடி இத்தகைய பந்துகளை ஆடாமல் விட்ட தவன், சாம் கரனை குறைத்து மதிப்பிட்டார், ஓரு ஓவரில் 3 பந்துகளைத் தடவியும் 4வது பந்தை ஆட முற்பட்டார், அன்று மஞ்சுரேக்கர் இவர் பலவீனம் எதுவென்று அடையாளம் கண்டாரோ அதே பலவீனத்தில் எட்ஜ் ஆகி கேட்ச் கொடுத்து வெளியேறினார், சாம் கரன் கலக்கிவிட்டார். தவண் 26 ரன்களில் வெளியேறினார்.

விராட் கோலி-ஆண்டர்சன் மோதல் எதிர்ப்பார்ப்புக்கு இணங்க நடைபெற்றது, ஆண்டர்சன் 9வது ஓவரை வீச கோலி தளர்வான ஒரு ஷாட்டை ஆட கல்லிக்குமுன்னால் பந்து விழுந்தது. உடலுக்குத் தள்ளி மட்டையைக் கொண்டு சென்று பெரிய கவர் ட்ரைவ் ஆட முயன்றார், இது தவறான அணுகுமுறை. தப்பினார். அடுத்த பந்தையும் இப்படித்தான் துரத்தி யார்க் செய்து கொண்டு ஆண்டர்சனைத் தடவினார் கோலி.

எப்படியோ உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 76 எடுத்துள்ளது. சாம் கரன் 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.