நன்கு படித்து, சுயமாக சம்பாதித்து சொந்தக் காலில் நிற்க பெண்கள் உறுதியேற்க வேண்டும்: எஸ்ஐஇடி கல்லூரி விழாவில் கிரண் பேடி அறிவுரை

0
0

பெண்கள் நன்கு படித்து சுயமாக சம்பாதித்து சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று சென்னை எஸ்ஐஇடி கல்லூரி விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கூறினார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நீதிபதி பஷீர் அகமது மகளிர் கல்லூரியில் (எஸ்ஐஇடி), மாணவிகள் கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. விழாவுக்கு எஸ்ஐஇடி அறக்கட்டளை தலைவரும், ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் தலைமைச் செயலாளருமான மூசா ரஸா தலைமை தாங்கினார். கல்லூரியின் செயலாளர் பைசூர் ரஹ்மான் சயீத் முன்னிலை வகித்தார். விழாவில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவிகள் மத்தியில் உரையாற்றினார். அவர் கூறியதாவது:

மாணவர்கள் வகுப்பில் அறிவுரை கூறும் ஆசிரியர்களை பெற்றோராகவும், வீட்டில் அறிவுரை கூறும் பெற்றோரை ஆசிரியர்களாகவும் பார்க்க வேண்டும்.பெண்கள் நன்கு படித்து சுயமாக சம்பாதித்து சொந்தக் காலில் நிற்க வேண்டும். ஒருபோதும் தங்கள் அடையாளத்தை இழந்துவிடக் கூடாது.திருமணம் செய்வது, குழந்தைகள் பெற்றுக்கொள்வது என அனைத்திலும் பெண்கள் சுயமாக முடிவெடுக்க வேண்டும். திருமணம் முடிந்த பிறகும் வேலைக்குச் செல்ல விரும்பினால், தைரியமாக வேலைக்குச் செல்ல வேண்டும்.

பெண்கள் சுயமாக சம்பாதிக்கும்போதுதான் சுயமரியாதையுடன் வாழ்வதும், சுயமாக சிந்திப்பதும், சுயமாக செயல்படுவதும் சாத்தியம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, கல்லூரி முதல்வர் ஷனாஸ் அகமது வரவேற்றுப் பேசினார். விழாவில் பேராசிரியைகள், மாணவிகள் திரளாக கலந்துகொண்டனர்.

விழா முடிந்த பிறகு, செய்தியாளர்களிடம் கிரண் பேடி கூறியதாவது:

துணைநிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, புதுச்சேரிக்கும் பொருந்தும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருப்பதாக கூறுகிறீர்கள். உச்ச நீதிமன்றம் அதுபோன்று தீர்ப்பு அளிக்கவில்லை.

அந்தத் தீர்ப்பு மிகத் தெளிவாக இருக்கிறது. டெல்லிக்கு பொருந்துவது, புதுச்சேரிக்குப் பொருந்தாது. காரணம், டெல்லி, இந்திய அரசியல் சாசன சட்டத் திருத்தத்தால் ஏற்படுத்தப்பட்ட யூனியன் பிரதேசம். புதுச்சேரியோ, நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசம்.

இவ்வாறுஅவர் கூறினார்.