தொழிற்சாலை வரும் வரை தாடி எடுப்பதில்லை: தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. சபதம்

0
0

கடப்பாவில் இரும்பு தொழிற்சாலைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கும் வரையில் தனது தாடியை எடுக்கப் போவதில்லை என்று தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சி.எம்.ரமேஷ் சபதம் எடுத்துள்ளார்.

ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சி.எம்.ரமேஷ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆந்திர மாநில பிரிவினை மசோதாவில் தெரிவித்தபடி, கடப்பா மாவட்டத்தில் இரும்பு தொழிற்சாலை தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். தொடர்ந்து 11 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த ரமேஷுக்கு மத்திய அரசு உறுதியளித்ததை அடுத்து, தமது போராட்டத்தை அவர் கைவிட்டார்.

இந்நிலையில், திருமலையில் நேற்று தனது குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் ரமேஷ் கூறும்போது, ‘‘கடப்பாவில் இரும்புத் தொழிற்சாலைக்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். மாநிலப் பிரிவினை மசோதாவிலேயே இதுகுறித்து கூறப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு பழிவாங்கும் நோக்கில் நடந்து கொள்கிறது. இரும்பு தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டும்வரை நான் தாடி எடுக்க மாட்டேன் என ஏழுமலையானுக்கு நேர்ந்துள்ளேன். இது எனது சபதம்’’ என்றார்.