தொப்பையைக் குறைக்காவிட்டால் அபராதம்: கர்நாடக போலீஸ் ஏடிஜிபி உத்தரவு

0
0

 

தொப்பை உள்ள போலீஸார் கடும் உடற்பயிற்சி செய்து தொப்பையை குறைக்காவிட்டால் அபராதத்தைச் சந்திக்க நேரிடும் என்று கர்நாடக ரிசர்வ் போலீஸ் ஏடிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கர்நாடக ரிசர்வ் போலீஸ் படையில் இருக்கும் போலீஸார் பானை போன்ற தொப்பை வயிறுடன் வலம் வருகிறார்கள். இதனால் போலீஸாரின் அணிவகுப்பிலும் முறையாகப் பங்கெடுத்து ஓட முடிவதில்லை, அவசர நேரத்தில் குற்றவாளிகளைப் பிடிக்கவும் ஓடமுடியாத சூழல் இருக்கிறது. இதைக் கண்ட ரிசர்வ்  போலீஸ் கூடுதல் டிஜிபி பாஸ்கர் ராவ் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார்.

அதன்படி, ரிசர்வ் படை போலீஸிஸ் தொப்பையுடன் இருக்கும் போலீஸாரை கண்டுபிடித்து, அவர்களுக்கு நோட்டீஸ் வழங்குமாறு உத்தரவிட்டார். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்து, உடல் எடையைக் குறைக்க வேண்டும் இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த 3-ம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டார்.

இதன்படி 12 பட்டாலியன்களில் இருக்கும் தொப்பை போலீஸாரை அடையாளம் காணும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அவர்களுக்குச் சிறப்பு உடற்பயிற்சியும், சத்தான உணவுகளும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பட்டாலியனின் இருக்கும் போலீஸாரை அழைத்து அவர்களின் பிஎம்ஐ அளவு பரிசோதிக்கப்பட்டு வருகிறது. உயரத்துக்கு ஏற்ற எடை இருக்கிறார்களா அல்லது கூடுதலாக இருக்கிறார்களா என்று ஆய்வு செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தொப்பை உள்ள போலீஸாரை கண்டுபிடிக்கும்போது, அவர்கள் காலை நேரத்தில் கண்டிப்பாக நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீச்சல் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ஏடிஜிபி பாஸ்கர் ராவ் கூறுகையில் “ 40முதல் 50 வயதுக்குட்பட்ட போலீஸார் ஆண்டுக்கு 150 பேர் மாரடைப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகியவற்றால் உயிரிழந்து வருகின்றனர். சிகரெட்புகைப்பது, மதுப்பழக்கம் ஆகியவற்றாலும் இந்த உயிரிழப்பு நடக்கிறது. இதைத் தடுக்கும் வகையில் இந்தப் பயிற்சி முறைகளும், கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. இதுபோன்று போலீஸ்துறையில் போலீஸார் அதிகளவில் இறப்பதை ஏற்க முடியாது. உடலைக் கட்டுக்கோப்பாக வைப்பதிலும், சத்தான உணவுகளை உண்பதிலும் ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன.

முதலில் போலீஸார் அரிசி சாதத்தை கைவிட்டு, தானியங்களுக்கு மாற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ரிசர்வ் படையில் உள்ள போலீஸாரின் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கப் பட்டாலியனில் இருக்கும் கமாண்டர்களே பொறுப்பாகும். ஆதலால், போலீஸாருக்கு நாள்தோறும் உடற்பயிற்சிகள், ஓட்டப்பயிற்சி, யோகா, ஆசனம்,மூச்சுப்பயிற்சி போன்றவற்றை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.