தொடக்கத்தில் இறங்கிய கருணரத்னே 158 நாட் அவுட் சாதனை: இலங்கையை முடக்கிய ரபாடா

0
0

காலே மைதானத்தில் இன்று தொடங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி தன் முதல் இன்னிங்ஸில் 287 ரன்களுக்குச் சுருண்டது. தென் ஆப்பிரிக்கா ஆட்ட முடிவில் மார்க்ரம் விக்கெட்டை இழந்து 4 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கை அணியில் இடது கை தொடகக் வீரர் திமுத் கருணரத்னே தொடக்க வீரராகக் களமிறங்கி 222 பந்துகளில் 13 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 158 ரன்கள் எடுத்து இறுதி வரை நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். சிதாத் விட்டுமனிக்குப் பிறகு தொடக்கத்தில் இறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காத இலங்கை வீரராகத் திகழ்கிறார் கருணரத்னே.

இவர் 158, மற்றொரு தொடக்க வீரர் குணதிலக 26, கடைசியில் சண்டகன் 25 இவர்கள் தவிர மற்றெல்லோரும் 25க்குக் கீழ் அவுட் ஆயினர். ரபாடாவின் வேகம் ஷம்சியின் ரிஸ்ட் ஸ்பின் இலங்கையைக் கவிழ்க்க 176/8 என்று இருந்த நிலையில் கருணரத்னேயுடன் லக்மல் (10), சண்டகன் (25) இணைந்து 111 ரன்களை மேலும் சேர்த்து 287 ரன்களுக்கு வந்தனர்.

ரபாடா. | கேட்டி இமேஜஸ்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், ஷம்சி 91 ரன்களுக்கு 3 விக்கெட். ஸ்டெய்ன், பிலாண்டர் தலா 1 விக்கெட். ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர் மார்க்ரம், ரங்கனா ஹெராத்தின் அற்புதமான ஒரு ஏமாற்றுப் பந்துக்கு டக் அவுட் ஆனார். ஆட்ட முடிவில் எல்கர் 4 ரன்களுடனும், இரவுக்காவலன் மஹராஜ் ரன் எடுக்காமலும் உள்ளனர்.

176/8-லிருந்து தென் ஆப்பிரிக்கா 200 ரன்களுக்குள் இலங்கையை சுருட்டியிருக்க வேண்டும், 8வது விக்கெட் விழுந்து 3 பந்துகளில் சுரங்க லக்மல், ஷம்சி பந்தில் நேராக கால்காப்பில் வாங்கினார், எல்.பி. அப்பீல் நடுவர் பால் ரெய்ஃபலா நிராகரிக்கப்பட்டது, தென் ஆப்பிரிக்கா ரிவியூ கைவசம் இருந்தும் பயன்படுத்தவில்லை, ரீப்ளேயில் பந்து ஸ்டம்பைத் தாக்குவது தெரிந்தது. முதலில் குணதிலகாவுக்கும் பிலாண்டர் பந்தில் ஒரு லெக் திசையில் கேட்ச் ஆனது, நடுவர் ரெஃய்பல் நாட் அவுட் என்றார், அப்போதும் ரிவியூ கேட்கவில்லை, அதுவும் அவுட், ஆனால் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை காரணம் ரபாடா விரைவில் குணதிலகாவை வீட்டுக்கு அனுப்பினார்.

கருணரத்ன தன் வாழ்நாளின் சிறந்த இன்னிங்ஸை ஆடியிருக்கிறார், ஸ்டெய்ன் பந்தை ஹூக் செய்து சிக்ஸ் விளாசினார். இதுதான் இன்னிங்சின் ஒரே சிக்ஸ்.

கருணரத்ன 158 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ இலங்கை ஓரளவுக்கு சவாலான 287 ரன்களை எட்டியது.