தேனியில் மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த கணவர்; தொப்புள் கொடியை அகற்ற மறுப்பு: மாமனார் கைது

0
0

தேனி அருகே மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவர் குழந்தையின் தொப்புள் கொடியை ஆங்கில மருத்துவ முறையில் அகற்ற மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து அந்த பெண்ணின் மாமனாரை போலீஸார் கைது செய்தனர்.

தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டி தென்றல் நகரை சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவரது மகன் கண்ணன் (29). பொறியியல் பட்டதாரியான இவர் எலெக்ட்ரீஷியனாக வேலைபார்த்து வருகிறார். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் மகாலட்சுமி (25) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் மகாலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கணவன், மனைவி இருவரும் சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தனர். இதுகுறித்து புகார் வந்ததையடுத்து, பி.சி.பட்டி காவல்நிலைய போலீஸார் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் அவரது வீட்டுக்கு வந்தனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்ல மறுத்த கண்ணன் தன் மனைவிக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் சுகப்பிரசவம் ஆக வேண்டும் என கூறியுள்ளார். இதனால் மருத்துவத்துறை அதிகாரிகள் கணவன், மனைவியிடம் எழுதி வாங்கிவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் மகாலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கண்ணன் தன் வீட்டிலேயே வைத்து மகாலட்சுமிக்கு பிரசவம் பார்த்துள்ளார். அப்போது மகாலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், அவர் குழந்தையின் தொப்புள் கொடியுடன் இணைந்துள்ள நஞ்சுக் கொடியை அகற்றாமல் வைத்ததாக காவல்துறையினருக்கும், மருத்துவத்துறையினருக்கும் தகவல் கிடைத்தது.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற மருத்துவத்துறையினர் நஞ்சுக் கொடியை அகற்ற வேண்டும,. குழந்தையின் உடல் நிலையை பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்தனர். ஆனால் கண்ணனும், மகாலட்சுமியும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் வரதராஜன் மற்றும் பி.சி.பட்டி காவல்துறை ஆய்வாளர் மணிமாறன், தேனி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ராமலட்சுமி ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நஞ்சுக்கொடியை அகற்றாவிட்டால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் குழந்தையின் உடல்நிலையை பரிசோதிக்க வேண்டும் என மருத்துவக்குழுவினர் கேட்டபோது ஆங்கில மருத்துவத்தின் பரிசோதனை செய்யக் கூடாது, சித்த மருத்துவர்கள் வேண்டுமானால் குழந்தையை பரிசோதிக்கலாம் என தெரிவித்தனர்.

இதையடுத்து போடேந்திரபுரம் வட்டார துணை மருத்துவ அலுவலர் திலகவதி, கம்பம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் சிராஜூதீன் ஆகியோர் அங்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் 14 மணி நேரமாகியுள்ளதால் தொப்புள்கொடியை அகற்றுமாறு சித்த மருத்துவர்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து குழந்தையின் தொப்புள் கொடி அகற்றப்பட்டது.

மேலும் மருத்துவர்களை மிரட்டியதாக கூறி கண்ணன், அவரது தந்தை தனுஷ்கோடி, தாய் அழகம்மாள் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்த பி.சி.பட்டி போலீஸார் தனுஷ்கோடியை கைது செய்தனர்.