தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல்சாசன அங்கீகாரம் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

0
0

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல்சாசனம் அளிக்கும் மசோதா மக்களவையில் மூன்றில் இருபங்கு ஆதரவுடன் இன்று நிறைவேறியது.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டநிலையில், 406 வாக்குகளுடன் மக்களவையில் நிறைவேறியது. 5 மணிநேரம் நடந்த விவாதத்தில் 32 எம்.பி.க்கள் பங்கேற்றுப் பேசினார்கள்.

அடுத்த ஆண்டு வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

மக்களவையில் இந்த மசோதா மீதான விவாதம், வாக்கெடுப்பு நடக்கும் போது, பிரதமர் மோடி அவையில் இருந்தார். மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்படவுடன், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தாவர்சந்த் கெலாட்டுக்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்த விவாதத்தின்போது பேசிய உறுப்பினர்களில் பெரும்பாலானோர், ஓபிசி மக்கள் தொகை குறித்துக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும், 2014-ம் ஆண்டு சமூக-பொருளாதார ஆய்வு அறிக்கையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இந்த மசோதாவை அறிமுகம் செய்து வைத்து தாவர்சந்த் கெலாட் பேசுகையில், பிற்படுத்தப்பட்ட மற்றும் விளிம்பு நிலையில் உள்ள மக்களை உயர்த்துவதற்கு இந்த அரசு கடமைப்பட்டுள்ளது. எஸ்சி,எஸ்டி பிரிவினரின் உரிமைகளைப் பாதுகாக்க வன்கொடுமை திருத்தச் சட்ட மசோதாவை அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் ஒரு பெண் உறுப்பினர் நியமிக்க உறுதி செய்யப்படும். இந்தத் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகளைப் பாதுகாக்கும். அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு விசாரணை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். எந்தவிதமான புகார்கள் வந்தாலும், சிவில் நீதிமன்றம் போன்று விசாரிக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இந்த விவாதத்தில் பேசிய முன்னாள் பிரதமர் எச்.டி.தேவேகவுடா, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அளவை 50 சதவீதத்துக்கும் மேல் உயர்த்தப்படுமா என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், இந்த மசோதா மீது லோக் ஜன சக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கல்யாண் பானர்ஜி, பிஜு ஜனதா தளம் கட்சியின் எம்.பி. பார்துருஹரி மஹ்தப், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் எம்.பி. பிரேமசந்திரன், சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த், தெலங்குதேசம் கட்சி எம்.பி. ராம்மோகன் நாயுடு கிஞ்சராப்பு உள்ளிட்டோர் விவாதத்தில் பங்கேற்று பேசினார்கள்.