தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்; 172 வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

0
0

 தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக சிப்காட் காவல் நிலையத்தில் பதிந்த குற்ற வழக்கு எண் 191-ன் கீழ் மற்ற 172 வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ஜான் வின்சென்ட் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த பொன் பாண்டியன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர்.

அதில், “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மே 22-ல் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்திய பொதுமக்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் போலீஸார் உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை.

பேரணியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டமாக வந்தனர். போராட்டக்காரர்கள் தான் முதலில் அரசு சொத்துகளைச் சேதப்படுத்தி பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரைத் தாக்கினர். இதன்பிறகு தான் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர் எனக் கூறப்படுகிறது. மேலும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ற போது மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்தில் இல்லாததால் சிறப்பு தாசில்தார் ராஜ்குமார் தங்கசீலன் என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி அளித்துள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே 22 ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூடு கலவரம் தொடர்பாக முதல் வழக்காக சிப்காட் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு எண் 191-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கினை தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இதன்பிறகு மே 22-ல் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பாக கூடுதலாக 172 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக சிப்காட், வடக்கு, தெற்கு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் மொத்தம் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் நடந்த ஒரே ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிந்த நிலையில் கூடுதலாக 242 வழக்குகள் பதிவு செய்து பொதுமக்களை சட்டவிரோதமாக விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்து வருகின்றனர். மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கும் போது உள்ளூர் போலீஸாரும் விசாரணை என்ற பெயரில் அடிக்கடி தொந்தரவு செய்கின்றனர்.

மே 22-ல் நடந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக சிப்காட் காவல் நிலையத்தில் பதிந்த குற்ற வழக்கு எண் 191-ஐ தவிற மற்ற 172 வழக்குகளின் கீழ் போலீஸார் விசாரிக்க தடை விதிக்க வேண்டும். 172 வழக்குகளையும் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 161 (3)-ன் கீழ் வாக்குமூலமாக கருதி முதல் வழக்குடன் சேர்த்து ஒரே வழக்காக விசாரணை செய்ய வேண்டும். மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக சிப்காட் காவல் நிலையத்தில் பதிந்த குற்ற வழக்கு எண் 191-ஐ நீதிமன்ற பார்வையின் கீழ் சிபிசிஐடி விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. அதில், மே 22-ல் நடந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக சிப்காட் காவல் நிலையத்தில் பதிந்த குற்ற வழக்கு எண் 191-ன் கீழ் மற்ற 172 வழக்குகளையும் விசாரிக்க உத்தரவிட்டனர். மேலும் குற்றவியல் நடைமுறை சட்டம் 161 (3)-ன் படி குற்ற வழக்கு எண் 191 கீழ் 172 வழக்குகளையும் ஒப்புதல் வாக்குமூலமாக கருதி ஒரே வழக்காக விசாரிக்க உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.