துருவங்கள் பதினாறு இயக்குனருடன் கைகோர்க்க தயாராகும் சிம்பு…! | Simbu next with Karthik Naren…?

0
0

சென்னை: நடிகர் சிம்பு விரைவில் கார்த்திக் நரேனுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தன்னுடைய அதிரடியான முடிவுகள் மூலம் எப்போதுமே மற்ற நடிகர்களிடமிருந்து வித்தியாசப்படுபவர் நடிகர் சிம்பு. மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

அதனைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் துருவங்கள் பதினாறு இயக்குனர் கார்த்திக் நரேனுடன் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் சிம்பு பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் நரேன் இரண்டாவதாக இயக்கியுள்ள பேண்டஸி த்ரில்லர் திரைப்படமான நரகாசூரன் இம்மாதம் 31ஆம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இப்பட ட்ரெயிலர் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும், நடிகர் அரவிந்த்சாமி, கார்த்திக் நரேன் சினிமாவுக்கு கிடைத்த பரிசு எனப் புகழ்ந்துள்ளார். இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் நரேன், நடிகர் சிம்புவை சந்தித்துள்ளார். அப்போது சிம்பு இயக்குவதற்காக வைத்திருக்கும் கதை பற்றி பேசியிருக்கிறார்.

சிம்புவின் ஐடியாவைக் கண்டு வியந்துபோன கார்த்திக், ஏன் தாமதம் உடனடியாக ஆரம்பிக்கலாமே எனக் கேட்டாராம். அதற்கு பதிலளித்த சிம்பு, சரியான நேரத்திற்காக காத்திருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், கார்த்திக் சொன்ன சில விஷயங்களையும் படத்தில் சேர்த்துக்கொள்ளலாம் எனக் கூறிய சிம்பு விரைவில் சேர்ந்து பணியாற்றுவோம் என உறுதியளித்துள்ளார்.

அதனால் சிம்புவுடன் விரைவில் பணியாற்றும் அறிவிப்பு வெளியாகும் என கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.