துணை நிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு அதிகாரிகள் என் உத்தரவை ஏற்க மறுக்கிறார்கள்: முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

0
0

துணைநிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு உயர் அதிகாரிகள் என்னுடைய உத்தரவை ஏற்று நடக்க வெளிப்படையாகவே மறுப்பு தெரிவிக்கிறார்கள் என டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.

டெல்லி அரசு நிர்வாகத்தில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கும் துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவுகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநருக்கு தனி அதிகாரம் இல்லை என்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை ஆலோசனைப்படி அவர் நடக்க வேண்டும் என்றும் சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனாலும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

இதுகுறித்து முதல்வர் கேஜ்ரிவால் டிவிட்டரில் கூறியிருப்பதாவது:

உச்ச நீதிமன்றத்தில் தோல்வி அடைந்த பாஜகவைச் சேர்ந்த துணைநிலை ஆளுநர் அனில் பைஜால், அரசு உயர் அதிகாரிகளை சட்டவிரோதமாக தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜகவும் அதிகாரிகளை பணி செய்ய வேண்டாம் என தடுக்கிறது. இதனால், முன் எப்போதும் இல்லாத வகையில் அமைச்சரவை உத்தரவையோ எனது உத்தரவையோ பின்பற்ற முடியாது என அதிகாரிகள் வெளிப்படையாகவே மறுப்பு தெரிவிக்கின்றனர். குறிப்பாக, ஏழைகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்க விரும்புகிறோம். இதைச் செயல்படுத்த பாஜக முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

எனினும் டெல்லி மக்களுக்காக நான் தொடர்ந்து போராடுவேன். அதேநேரம் மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளை டெல்லி மக்கள் அடுத்த தேர்தலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு கேஜ்ரிவால் கூறியுள்ளார்.