தி.நகரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: இளைஞர் கைது

0
0

கடந்த மாதம் தி.நகரில் உள்ள மெர்க்கன்டைல் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைத் திருட முயன்ற இளைஞர் நேற்று கைது செய்யப்பட்டார்.

சென்னை தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. கடந்த ஜூலை 13-ம் தேதி அன்று இரவு இந்த ஏடிஎம் மையத்தில் புகுந்த இளைஞர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைத் திருட முயன்றுள்ளார். ஆனால் ஏடிஎம் இயந்திரத்தைத் திறக்க முடியாத காரணத்தால் சிறிது நேரத்தில் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

இது குறித்து மெர்க்கன்டைல் வங்கியின் மேலாளர் ஆர்-1 மாம்பலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. ஆர்-1 மாம்பலம் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து விசாரணை செய்தனர்.

இந்நிலையில் இதில் சம்பந்தப்பட்ட ஷேக் சுலைமான் பாட்ஷா (19) என்ற இளைஞரைக் கைது செய்தனர். திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஷேக் சுலைமான் பாட்ஷா மீது அண்ணாசாலை காவல் நிலையத்திலும் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற வழக்கு உள்ளது.

கைது செய்யப்பட்ட ஷேக் சுலைமான் பாட்ஷா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.