திரை வெளிச்சம்: துரத்தும் விளம்பரங்கள்! – இந்து தமிழ் திசை

0
0

இன்று முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு அவர்களது நட்சத்திரச் செல்வாக்கே போதுமான விளம்பரமாக மாறிவிடுகிறது. ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற நடிகர்கள் நடிக்கும் புதிய படத்தில் அவர்கள் தோன்றும் ஒரு ஃபஸ்ட் லுக் போஸ்டர் போதும்.. அந்தப் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க. ஆனால் சின்னப் படங்களுக்கு?

இன்று ஒரு சிறிய பட்ஜெட் படத்தின் தயாரிப்புச் செலவைவிட விளம்பரச் செலவு அதிகமாகிவிட்டது. படம் எடுத்து முடித்துவிட்டு வெளியீட்டுக்கே விழிபிதுங்கி நிற்கும் பல தயாரிப்பாளர்கள் இன்றைய செய்தி யுகத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு செலவின்றி விளம்பரம் செய்யும் ஜாலத்தை நிகழ்த்தி வருகிறார்கள்.

பாகுபலி டச்!

சமீபத்தில் ‘தமிழ்ப் படம்-2’ படத்துக்கான ஒரு போஸ்டர் பலரையும் கவர்ந்தது. அனைத்துத் தரப்பு பார்வையாளர்களும் காணத் தகுதிகொண்டதாக ஒரு படம் தணிக்கையில் ‘யூ’ சான்றிதழ் பெறுவது தற்காலத்தில் மிக அபூர்வம். அது ‘தமிழ்ப் படம் 2’ படத்துக்குக் கிடைத்ததும் அதைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த தயாரிப்பாளர், மக்களிடம் நன்கு பிரபலமான ‘பாகுபலி’ படத்தின் காட்சி ஒன்றை இமிடேட் செய்து தங்கள் படத்துக்கு ‘யூ’ கிடைத்துவிட்டது என்பதையே செலவற்ற ஆனால் மிகச் சக்தி வாய்ந்த விளம்பரமாக மாற்றிவிட்டார். திரைப்படங்களைப் பகடி செய்யும் அந்தப் படத்துக்கு அந்த ஐடியாவும் பொருத்தமாக அமைந்துவிட்டது.

முதல் பார்வைக்கு முன்பே…

சிறு படங்களுக்கு செலவில்லா விளம்பரம் என்று வரும்போது அதில் ஃபர்ஸ்ட் லுக் என்று பெயர்பெற்றுவிட்ட படத்தின் முதல் பார்வை வெளியாகும்போது படம் பற்றிய எதிர்பார்ப்பை அது உருவாக்கிவிடுகிறது. ஆனால் அந்த முதல் பார்வைக்கே ஒரு முன்னோட்டத்தை வெளியிட்டுக் கவர்ந்துவிட்டார் ஒரு தயாரிப்பாளர். கலையரசன் நடிக்கும் ‘முகம்’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகிறது என்று குறிப்பிட்டு, முதன்மைக் கதாபாத்திரத்தின் முகம் இருக்கும் பகுதியை மட்டும் மறைத்து வெளியிட்டது கவனத்தை சட்டென்று ஈர்த்தது. தயாரிப்பாளரும் இயக்குநரும் நேரடியாக வெளியிட்டுவந்த முதல் பார்வை போஸ்டர்களை, இன்று சினிமா பிரபலங்களை வைத்து வெளியிடச் செய்து கூடுதல் கவனம் பெற வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள்.

‘சாமி ஸ்கொயர்’ படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ்

செய்தியே விளம்பரமாக…

ஒரு படம் குறித்த செய்திகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டு பார்வையாளர்களை துரத்திக்கொண்டே இருக்கும் செலவில்லா விளம்பர உத்தியையும் தயாரிப்பாளர்கள் தற்போது அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். சமீபத்தில் அப்படியொரு செய்திக்கு அதிக கவனம் கிடைத்தது. ஹரி இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகிவரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் கதைப்படி விக்ரம் ஜோடியாக த்ரிஷா நடிக்க வேண்டும். ஆனால் அவர் நடிக்கமுடியாது என்று கூறி விலகிவிட்டார்.

த்ரிஷாவுக்கு பதிலாக அவரது இடத்தில் யார் நடிக்கப்போகிறார்கள் என்பதைத் தெரிவிக்காமல் இழுத்தடித்துக்கொண்டே வந்த படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடக்கும் நேரத்தில் த்ரிஷாவுக்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ் என்று தகவல் தந்து, அதை இலவச விளம்பரமாக மாற்றிவிட்டது. உண்மையில் த்ரிஷா நடிக்க மறுத்துவிட்டது உறுதியானதுமே ஐஸ்வர்யா ராஜேஷ் உறுதி செய்யப்பட்டிருக்கலாம். அதை எந்தக் கட்டத்தில் வெளிப்படுத்தினால் படத்துக்கான எதிர்பார்ப்பை உருவாக்கலாம் என்று முடிவு செய்வது இயக்குநர் தயாரிப்பாளர் மற்றும் படத்தின் மக்கள் தொடர்பாளர் ஆகிய மூவரும்தான்.

இன்று பத்திரிகை, தொலைக்காட்சிகள், பண்பலை வானொலி, இணைய ஊடகங்களுக்கு மட்டுமல்ல, சமூக ஊடகங்களுக்கும் செய்திப் பசி அதிகரித்திருக்கிறது. அதை திரைப்படத் தயாரிப்பாளர்கள் நன்றாகவே பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஒரு படம் பற்றிய செய்திகளை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து தந்து, எதிர்பார்ப்பை உருவாக்குவதில் கில்லாடிகளாக மாறிக்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஒரு படத்துக்கு செய்யப்பட்டுவரும் செலவில்லா விளம்பர உத்திகளை இங்கே சுருக்கமாக பட்டியலிடலாம் வாருங்கள்.

தொழில்நுட்பக் குழு அறிவிப்பு

ஒரு படம் பற்றிய முதல் கட்ட எதிர்பார்ப்பை உருவாக்குவது இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படத்தில் பங்குபெறும் நடிகர்கள் குழுவைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு. அறிமுக இயக்குநருக்கு ஒரு முன்னணிக் கதாநாயகன் கால்ஷீட் தருவது அந்தப் படம் பற்றிய எதிர்பார்ப்பை உருவாக்கும் செய்தியாகிறது. அதேபோல பிரபல இயக்குநர் – பிரபல நடிகர் கூட்டணியும் அந்தக் கூட்டணியில் முன்னணி இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் இணைவதும் சூடனா செய்தியாக மாறுகிறது.

அடுத்தடுத்த தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வும் தொடர் செய்தியாக மாறுகிறது. இதனால் படக்குழுவில் இணைபவர்களைப் பற்றி ஒரேநேரத்தில் அறிவிக்காமல் ஒவ்வொருவராக அறிவித்து அதைச் செய்தி வடிவிலான விளம்பரமாக மாற்றிவிடும் ஜாலம் நிகழ்த்தப்பட்டுவிடுகிறது. கதாநாயகியை முன்னரே தேர்வு செய்திருந்தாலும் பலருடன் பேச்சுவார்த்தை நடத்தியது போன்ற செய்தியை ஊடகங்களுக்குக் கசியவிட்டு, பின்னர் தேர்வு செய்யப்பட்ட கதாநாயகி பங்குபெறும் படப்பிடிப்புக்கு ஒருசில தினங்கள் முன்பாக ‘இவர்தான் கதாநாயகி’ என ஒளிப்படத்துடன் அறிவிக்கும் வைபவம் செலவில்லா விளம்பரமாக களைகட்டுகிறது.
 

தலைப்போடு விளையாடு!

என்சாண் உடம்புக்கு உடலே பிரதானம் என்பதுபோல ஒரு படத்தின் தலைப்பே பரபரப்பான செய்தியாகி அனைவரையும் பேச வைத்துவிடுகிறது. படத்தின் தலைப்பே படம் பற்றிய ஒரு முன்தீர்மானத்தை உருவாக்குவதால், நல்ல தலைப்பு கிடைக்கும்வரை காத்திருந்து அறிவிக்கிறார்கள். இன்னும் சிலர், தலைப்பைத் தேர்வு செய்து தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருந்தாலும் தயாரிப்பு எண்: 1, 2 என எண்கள் கொடுத்து படப்பிடிப்பு நடத்திவிட்டு ‘தலைப்பை’ அறிவிப்பதையே செலவில்லா விளம்பரமாக மாற்றிக் காட்டுவது தற்போது நடைமுறையில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் தொடக்கத்திலேயே தலைப்புகள் வழியாக ஈர்த்துவிடுமுறையையும் கடைப்பிடிக்கவே செய்கிறார்கள்.

தொடக்கம்

படத் தலைப்பு கிடைத்தால் சரி, அது கிடைக்கும் வரை காத்துக்கொண்டிருக்க முடியாது என்று பூஜையுடன் தொடங்கிவிடுகிறது படப்பிடிப்பு. படத்தின் தொடக்கவிழா எப்படிச் செய்யப்படுகிறது என்பதைப்பொறுத்து அதுவும் செய்தியாகிறது. பட பூஜையும் தொடக்கவிழாவும் அங்கே வரும் நடிகர்களிடம் ‘பைட்’ வாங்குவதும் தொலைக்காட்சிகள் மற்றும் இணையக் காணொலித் தளங்களுக்கு பெரும் செய்தியாகிவிடுவதால் தயாரிப்பாளருக்குச் செலவில்லா விளம்பரமாக மாறிவிடுகிறது.

ஷூட்டிங் ஸ்பாட்

ஸ்டுடியோவுக்குள் நடக்கும் இண்டோர் ஷூட்டிங், சென்னைக்கு வெளியே நடக்கும் அவுட்டோர் ஷூட்டிங் என படப்பிடிப்பில் நடக்கும் கலகலப்பும் பரபரப்பும் ஆச்சரியமும் கலந்த நிகழ்வுகள், படப்பிடிப்பில் நடக்கும் விபத்துகள் என நட்சத்திரங்களைச் சுற்றி நடக்கும் அனைத்தும் பேட்டிகளாகவும் கட்டுரைகளாகவும் பிரத்தியேக ஒளிப்படங்களுடன் பத்திரிகைகளிலும் படக்குழுவை அழைத்துப் படப்பிடிப்பு அனுபவங்களைப் பகிரச்சொல்லும் நிகழ்ச்சிகளாக தொலைக்காட்சிகளிலும் அவை செலவில்லா விளம்பர வெளிச்சம் பெறுகின்றன. இவற்றோடு டீஸர், ட்ரைலர் வெளியீடு, இசை வெளியீடு, ஸ்னீக் பீக் எனப்படும் காட்சிகள் வெளியீடு என ரசிகர்களைத் துரத்தும் செலவில்லா விளம்பரங்களை திட்டமிட்டு படிப்படியாகப் பயன்படுத்திக்கொள்ளும் சிறுபடத் தயாரிப்பாளர்கள், வெற்றியின் பாதிக் கிணற்றை எளிதாகத் தாண்டிவிடுகிறார்கள்.

“எப்போதுமே அப்பா தான் சாக்லேட் பாய்” – கவுதம் கார்த்திக்