திரை விமர்சனம்: ஆன்ட் – மேன் அண்ட் த வாஸ்ப் (Ant-man and the Wasp)

0
0

மார்வெல் நிறுவனத்தின் 20-வது படமாக வெளியாகியிருக்கிறது ஆன்ட் – மேன் அண்ட் த வாஸ்ப் (Ant-man and the Wasp).

ஆன்ட்-மேன் உடையை உருவாக்கிய ஹேங்க்கும் அவரது மனைவியும் நீண்ட நாட்களுக்கு முன்பு ஒரு ஏவுகணையை செயலிழக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அப்போது ஏற்படும் ஒரு விபத்தில் குவாண்டம் ரியால்ம் (quantum realm) எனப்படும் வேறொரு பரிமாணத்தில் சிக்கிக் கொள்கிறார் ஹேங்க்கின் மனைவி. இந்தக் காட்சியுடன் தொடங்குகிறது படம்.

சிவில் வார் திரைப்படத்தில் கேப்டன் அமெரிக்கா குழுவுக்கு உதவியதால் ஏற்பட்ட பெரும் சேதங்களால் இரண்டு வருடங்களாக வீட்டுச் சிறையில் இருக்கிறார் நாயகன் ஸ்காட். அவர் காலில் ஒரு கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஸ்காட் வீட்டை விட்டு ஒரு அடி நகர்ந்தாலும் அது போலீஸுக்கு தகவல் அனுப்பிவிடும்.

இந்த நிலையில் ஸ்காட்டுக்கு ஒரு கனவு வருகிறது. அதில் குவாண்டம் ரியால்மில் சிக்கிக் கொண்ட ஹேங்கின் மனைவி ஜேன்னட், தன் மகள் ஹோப்பிடம் பேசுவது போல வருகிறது அந்தக் கனவு. இதனால் குழப்பமடையும் ஸ்காட் இந்தக் கனவு பற்றி ஹேங்க்குக்கு தகவல் அனுப்புகிறார்.

 

பின்பு ஸ்காட்டை மீட்கும் நாயகி ஹோப், தன் தாயைக் காப்பாற்ற தன் தந்தையான ஹேங்க்குடன் சேர்ந்து குவாண்டம் ரியால்முக்கு செல்லும் ஒரு செயற்கைப் பாதையை உருவாக்குகிறாள். அதற்கு தேவைப்படும் சில பொருட்களை கள்ளச்சந்தை மூலம் வாங்க  சன்னி பர்ச் என்பவனை அணுகுகிறாள். இவர்களின் திட்டத்தை அறிந்து கொள்ளும் பர்ச் அந்த திட்டத்தை அபரிக்க வேண்டி ஹோப்பைத் தாக்குகிறான். அதிலிருந்து ஸ்காட்டின் உதவியுடன் தப்பிக்கும் ஹோப் விசித்திர உருவம் கொண்ட ஒரு பெண்ணால் மீண்டும் தாக்கப்படுகிறாள். அவள் பெயர் கோஸ்ட் (ghost).ஹோப்பை தாக்குவது மட்டுமின்றி அவர்களது திட்டத்தையும் அபகரிக்கிறாள்.

மீண்டும் அந்தத் திட்டம் ஹோப் மற்றும் ஆன்ட்-மேனால் கைப்பற்றப்பட்டதா?  குவாண்டம் ரியால்மிலிருந்து ஜேன்னட் மீட்கப்பட்டாரா? கோஸ்ட் என்பவள் யார்? என்பதே படத்தின் கதை.

வழக்கமான மார்வெல் சூப்பர்ஹீரோ கதை தான். ஆனால் அதை விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சொன்ன விதத்தில் ஜெயித்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

 

கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான ஆன்ட்-மேன் முதல் பாகத்தை இயக்கிய பீட்டன் ரீட்தான் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். வசனங்களில் நகைச்சுவை தெறிக்கிறது. படத்தின் பல அட்டகாசமான காட்சிகள் உண்டு. உதாரணமாக தான் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் ஆராய்ச்சிக் கூடத்தையே ஒரு சூட்கேஸ் போல சிறியதாக்கி இழுத்துக் கொண்டு செல்வது ஒரு உதாரணம். சண்டைக் காட்சிகளிலும் சேஸிங் காட்சிகளிலும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சிக்கும் தியேட்டரில் விசில் பறக்கிறது.

படத்தின் முடிவில் முக்கியமான கிரெடிட் சீன் ஒன்று உண்டு. அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்தில் ஆன்ட்-மேன் ஏன் இல்லை என்பதற்கான விடை அதில் உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இன்ஃபினிட்டி வார் அடுத்த பாகத்துக்கான நேரடித் தொடர்பும் அதில் உள்ளது.

மொத்தத்தில் ஜாலியாக சிரித்து ரசித்துப் பார்க்க வேண்டிய இன்னொரு மார்வெல்  படம் ஆன்ட் – மேன் அண்ட் த வாஸ்ப் (Ant-man and the Wasp).