திரைப் பார்வை: சாதாரண வாழ்க்கையின் விறுவிறுப்பு! – மரடோனா (மலையாளம்)

0
0

சமீபகால மலையாள சினிமாவின் கதை சொல்லும் போக்கில் பல புதிய அம்சங்கள் பாதிப்பை விளைவித்திருக்கின்றன. அவற்றில் முக்கியமானது த்ரில்லர் சினிமா மீதான பார்வையாளர்களின் ஈர்ப்பு. ஒரு சாதாரண வாழ்க்கைக் கதையைக் கூட விசாரித்துச் செல்வது ஒரு பாணியாகவே அங்கே மாறியிருக்கிறது. மார்ட்டின் ப்ரக்காட்டின் ‘சார்லி’,  ஆஷிக் அபுவின் ‘மாயாநதி’, கிரீஷ் தாமோதரனின் ‘அங்கிள்’ எனப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். இந்த வகையில் சமீபத்தில் வெளிவந்துள்ள படம்தான், ‘மரடோனா’.

இயக்குநர்கள் ஆஷிக் அபு, திலீஷ் போத்தன் ஆகியோரின் இணை இயக்குநரான விஷ்ணு நாராயணனின் முதல் படம் இது. இயக்குநர்கள் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி, திலீஷ் போத்தன் ஆகியோரின் இணை இயக்குநரான கிருஷ்ணமூர்த்தி திரைக்கதை ஆசிரியராக இதில் அறிமுகமாகியிருக்கிறார். ‘ஒரு மெக்சிகன் அபாரத’, ‘மாயாநதி’ ஆகிய படங்கள் மூலம் கவனம்பெற்ற டோவினோ தோமஸ்தான் நாயகன்.  இந்த அம்சங்கள் படத்தின் மீதான ஈர்ப்பைக் கூட்டியிருந்தன.

நாயகனின் தஞ்சம்

கர்நாடக மாநிலத்திலுள்ள மலைப்பகுதி ஒன்றில் தொடங்குகிறது படம். கை, கால்களில் கடுமையான காயங்களுடன் ஒரு கும்பலிடமிருந்து டோவினோ தப்பித்துவருகிறார். இந்தக் காட்சியிலேயே பெரும் எதிர்பார்ப்பைக் கூட்டிவிடுகிறது. டோவினோ பெங்களூருவில் வசிக்கும் ஒரு தூரத்து உறவினரின் பல்லடுக்கு மாடிக் குடியிருப்பில் தஞ்சம் அடைகிறார்.

சொந்தக்காரரோ நாயகனையும் அவரது செல்ல நாய்க்குட்டியையும் விட்டுவிட்டு சுற்றுலா சென்றுவிடுகிறார். வெளிப்புறமாகப் பூட்டப்பட்ட இரு படுக்கையறை கொண்ட அந்த வீடுதான் படத்தின் களம். அதிலிருந்து படம் முன்னேயும் பின்னேயும் நகர்ந்து, ஒரு குற்றச் சம்பவத்தை, காதலை, குற்ற உணர்வை அவிழ்க்க முயல்கிறது.

‘அங்கமாலி டைரீஸ்’ மூலம் யூகிளாம்ப் ராஜனாக அறியப்பட்ட டிட்டோ வில்சன் இதில் நாயகனின் நண்பனாக வருகிறார். இந்தக் கதாபாத்திரம், ஒரு சாரமாக வாழ்க்கையை நாயனுக்கு எடுத்துக் காட்டுகிறது. ஆனால் அது வசனங்களாகக் காட்சிப்படுத்தப்படாமல் காட்சியின் வழியே வாழ்க்கையின் ஈடுசெய்ய முடியாத இழப்புகளைச் சொல்கிறது.

உதாரணமாக ஆங்கிலப் பள்ளி ஒன்றில் படிக்கும் வசதியான குடும்பத்துப் பெண்ணின் பின்னால் நடந்து காதலித்து மணக்கிறார். இரு குழந்தைகளுக்குப்பிறகு அதே பெண்ணைத் திரும்பிப் பார்க்கக்கூட டிட்டோவுக்கு நேரம் கிடைக்கவில்லை.

பட்டாம்பூச்சியின் சிறகசைப்பு!

அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கும் நாயகனுக்கும் காதல் வருகிறது. சுவர்ச் செடிகளால் மறைக்கப்பட்டிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் பக்கத்து பால்கனிப் பெண்ணின் மீது காதல். ஆனால் அவளது குரல் மட்டும் கேட்கிறது. வைக்கம் முகம்மது பஷீரின் ‘மதிலுகள்’ நாராயணியை இந்த இடம் ஞாபகப்படுத்துகிறது. உள்ளே பிராணிகள் மீது பிரியமில்லாத நாயகனுக்கும் குட்டி நாய்க்குமான உறவும் சுவாரசியம் ஊட்டுகின்றன.

அடுத்தடுத்த காட்சிகள், நாயகனை விவரித்துக்கொண்டே செல்கின்றன. செம்பன் விநோத், கேரளத்தின் பெரிய அரசியல்வாதி ஒருவருக்காக நாயகனைத் துரத்திவருகிறார். எதனால் துரத்திவருகிறார், நாயகனுக்கு ஏன் அடிபட்டது எனக் கேள்விகளுக்கான விடைகளாகவும் காட்சிகள் விரிகின்றன. இவற்றுக்கு இடையில் பணம், கேளிக்கை, இன்பம் எனப் பரபரத்துக்கொண்டே இருக்கும் மனித வாழ்க்கையை, படம் ஒரு பட்டாம் பூச்சியைப் போல சில நேரம் பிடித்துவைக்கிறது.

ஆஷிக் அபுவின் ‘மாயாநதி’யைப் பல விதங்களிலும் நினைவூட்டும் இந்தத் திரைக்கதையை, ஒரு கணிதச் சமன்பாடு மாதிரி உருவாக்கியிருக்கிறார்கள். இதற்குள் ஒரு காதல், நட்பு, குரு மாதிரியான தத்துவம் உதிர்க்கும் அண்டை வீட்டுப் பெரிய மனிதர், அதிகார வர்க்கத்தின் தலையீடு, தேர்தல் ஜனநாயகம் என எல்லாவற்றையும் சுவீகரித்துக்கொண்டுள்ளனர்.

சில காட்சிகளை மாற்றியமைத்தாலும் சமன்பாடு குலைந்துவிடும் அபாயமும் இருக்கிறது. அதனால் இந்தச் சமன்பாட்டுக்கு நியாயம்செய்யப்போய் படம், முடிவில் யதார்த்தத்தைக் கைவிட்டுவிட்டது.

தொடர்புக்கு: [email protected]